பக்தி - அ.ச ஞானசம்பந்தன்


                                                                

இந்தப் பெரிய உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால், எல்லா மொழிகளும், முழு வளர்ச்சி பெற்றவை அல்ல. சில மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. ஒரு மொழி வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், அதன் பொருள் என்ன? நல்ல இலக்கணம், இலக்கியம் நிறைந்துள்ள மொழியை வளர்ச்சி அடைந்துள்ள மொழி என்று கூறுகிறோம். அம்முறையில் பார்ந்தால் முழு வளர்ச்சி பெற்ற மொழியாகும் நம் தமிழ் மொழி.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இம் மொழியில், நிறைந்த இலக்கண இலக்கியங்கள் உண்டு. அவ்வளவு பழைய இலக்கியத்திலும் ஒரு தனிச் சிறப்பை உடையது நம் தமிழ் மொழி. இந்த வளம் பற்றிப் பாடும் சிறப்பை அப்பொழுதே பெற்றுள்ள மொழி இதுவாகும். மிகப் பழைய பாடல்களான முருகப் பெருமானைப்பற்றிக் கூறும் திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் இருக்கின்றன.

இவற்றையே பக்திப் பாடல்கள் என்று கூறுகிறோம். பக்தி என்றால் யாது? மனிதனிடந்துக் காணப்படும் ஒருவகை மன நிலையையே பக்தி என்று கூறுகிறோம். மனிதன் முதலில் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களைக் காணுகிறான். இறுதியாகத் தன்னைத் தானேயும் காண்கிறான். புல் பூண்டில் தொடங்கி மனிதனில் முடிவுபெறும் இப் பரந்த உலகம் வேறு பாடு நிறைந்ததாக உள்ளது. இந்த வேறுபாடுகளினிடையே ஓர் ஒற்றுமைத் தன்மையைக் காண்பவன் எவனோ அவனே பக்தன் எனப்படுவான். இவ்வளவு வேறுபாடுடைய பொருள்களையெல்லாம் உண்டாக்கி, காப்பாற்றி, இறுதியில் அழித்து மறுபடியும் பிறக்கச் செய்யும் ஒரு தலைவன் இருந்து தீர வேண்டுமல்லவா? தலைவனில்லாமல் எந்த ஒன்றும் ஒழுங்காக தடை பெறுவதில்லை. இதைக் கருதித்தான் கம்பநாடர் 

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும், நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா, அலகிலா விளையாட்டு உடையார் அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே" 

என்று கூறிப்போனார். தலைவனை உணர்ந்து, தன்னை உணர்ந்து, தனக்கும் தலைவனுக்கும் உள்ள தொடர்பை உணர்ந்து, அத் தொடர்பை நன்முறையில் ஏற்படுத்திக் கொள்பவனே பக்தன் எனப்படுகிறான். 

தலைவனிடத்து அவன் கொண்ட தொடர்பே பக்தி எனப்படுகிறது. ஒரு பக்தனுடைய உண்மை பக்தி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைப் பெரியோர்கள் அழகாக எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். மாணிக்கவாசகப் பெருமாள் வெள்ளந்தாழ் விரிசடையாய் " என்ற பாடலில் உண்மையான பக்தியின் இலக்கணத்தை அழகாக எடுத்துக கூறுகிறார்.

கங்கையைச் சடையில் தரித்தவனே, தேவர்களின் தலைவனே " என்று பிறர் சொல்வதைக் கேட்ட மாத்திரத்தில் உண்மையான பக்தர்கள் மேட்டிலிருந்து பள்ளத்தில் பாயும் தண்ணிரைப்போல உள்ளம் உருகி வழிபட்டு நிற்கிறார்கள். ஆனால், அப்படி உருகுகின்ற அடியார்களையெல்லாம் விட்டு வீட்டு, நாயினும் கடையினனான என்னைவந்து ஆண்டு கொண்டாயே; அப்படி ஆண்டு கொண்டவனாகிய உனக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? என் உடம்பெல்லாம் கண்களிலிருந்து  கண்ணீர் பொழிய வேண்டும். உள்ளங்காலிலிருந்து உச்சிவரையும் நெஞ்சாக இருந்து உருகவேண்டும்: இவை இரண்டும் இல்லாமையினால் என் நெஞ்சத்தைக் கல்லென்றே கூறுகிறேன்; என் கண்களை மரம் என்றே நினைக்கின்றேன். என் தீவினைப் பயன்போலும் இது. இந்தப் பொருளில் மணிவாசகப் பெருமான் பாடிய பாடலைக் காண்போம்.

வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!

விண்ணோர் பெருமானே!' எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய்,

பள்ளம் தாழ் உறு புனலில், கீழ் மேலாக,

பதைத்து உருகும் அவர் நிற்க, என்னைஆண்டாய்க்கு,

உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்

உருகாதால்; உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா!

வெள்ளம் தான் பாயாதால்; நெஞ்சம் கல் ஆம்;

கண் இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே.


திருவைகாவூர் என்ற ஊருக்கு ஞானசம்பந்தர் செல்கிறார். அங்கே குடிகொண்டுள்ள ஆண்டவனைச் சில அன்பர்கள் பாடுகிறார்கள். வயது முதிர்ந்த காரணத்தாலும், இசைப் பயிற்சி இல்லாத காரணத்தாலும், அவர்களுடைய பாடல்கள் கேட்பதற்கு இனிமையற்றதாக இருந்தனபோலும். அப்படியிருந்தும் உள்ளன்போடு அவர்கள் பாடுகின்ற காரணத்தால் ஆண்டவன் அவர்களுடைய பாடல்களையும் ஏற்றுக் கொண்டு அருள் செய்வான் என்று கூறுகின்றார் ஞானசம்பந்தர்.

சனியோடு நிறைந்த கண்டத்தால் பொருள் இல்லாத கவிதைகளைப் பொருந்தாத இசையில் பாடினாலும் கூட, பாடுகின்றவர்கள் உள்ளன்பைக் கருதி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுகின்ற இறைவன் வாழுகின்ற இடம் யாது எனில், 

மிக நீண்டு வளர்த்திருக்கின்ற தென்னை மரத்தில் உள்ள நெற்றுக் காய்கள் கமுகு மரத்திலே விழ, கமுகு மரத்திலுள்ள காய்கள் சிந்தி வாழையின் மேல் விழ, வாழைப் பழங்கள் சிதறி வயலில் வீழ்ந்து சேறாகச் நிறைந்திருக்கின்றன திருவைகவூர்.

"இப் பொருள்படப் பாடுகின்ற ஞானசம்பந்தர் பாட்டில் உண்மையான பக்தி இருக்குமேயானால், வேறு எதுபற்றியும் கவலையில்லை என்ற பொருளைப் பெற வைக்கின்றது.

கோழை மிடறாக கவி கோளும் இலவாக இசை கூடும் வகையால்

ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடமாம்

தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி

வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறு செயும் வைகாவிலே. 

பக்தியின் எல்லையிலே சென்று நிற்கும்பொழுது மனிதனுக்குரிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து பொறிகளும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து புலன்களும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு அந்தக்கரணங்களும் ராஜஸ, தாமஸ, சத்துவ குணங்கள் மூன்றும் ஒன்றாய் நிலைத்து விடுதலைக் காண்கின்றோம். 

சுந்தர மூர்த்தி சுவாமிகள், சிதம்பரத்திலே ஐயன் அண்டமுற நிமிர்ந்து, ஆடும் கூத்தினைக் காணச் சென்று அவன் முன்னர் நிற்கின்றார். அவருடைய அறிவெல்லாம் கண்களேயாக, கரணங்கள் எல்லாம் சித்தையேயாக, குணங்கள் எல்லாம் சாத்துவிகமே ஆக இந்துவாழ சடையான் ஆடும் எல்லையில் தனிப்பெரும் கூத்தில் தம்மை மறந்து நிற்பதை இதோபாடுகிறார். 

ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள

அளப்பரும் கரணங்கள் நான்கும்

சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்

திருந்துசாத் துவிகமே ஆக

இந்துவாழ் சடையான் ஆடும்

ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்

வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து

மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.

ஓள்ளிய நிலவைச் சடையிலே உடைய பெருமானே! உன் அழகிய நடனத்தைக் கும்பிடக்கூடிய பெருமை பெற்று இந்த மண்ணிலே வந்த பிறப்பே எனக்கு மிகுதியும் இன்பந் தருவதாகும் என்று கண்ணில் ஆனந்த அருவி நீர் பொழிய; கைகளைத் தலைமேற் குவித்து, பண்ணூெடு கூடிய அழகிய பதிகத்தைப் பாடினார்" என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகிறார். சுந்தரமூர்த்திகளுடைய மன நிலையை ஏறத்தாழப் படம் பிடித்துக் காட்டுகிறார் தொண்டர் சீர் பரவ வல்ல சேக்கிழார்.

தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்

திருநடம் குமிபடப் பெற்று

மண்ணிலே வந்த இப்பிறவியிலே எனக்கு

வலிதான் இன்பமாம் என்ற

கண்ணிலானந்த அருவி நீர் சொரியக்

கைமலர் உச்சிமேற் குவித்துப்

பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்

பாடினார் பரவினார் பணிந்தார்

சிறந்த பக்தியுடைய அடியார்களுக்கு அவர்கள் பக்தியைத் தவிர வேறு எதுகிடைப்பதானாலும் மகிழ்ச்சி ஏற்படுவதில்லை. பரிபாடலில் முருகப்பெருமாளை நோக்கி ஒரு பக்தர் வேண்டுவதாகப் பேசப்படுகின்ற பாடல் நினைக்கும் தோறும் இன்பம் பயப்பதாகும். "ஐய நின் மாட்டு இரப்பவை பொன்னும், பொருளும், போகமும் அல்ல: அன்பும், அருளும் இணர்க்கடம்பின் ஒலி தாரோயே" முருகப்பெருமானைப் பார்த்து எனக்குச் சொத்து, சுதந்திரம் ஒன்றும் வேண்டாம்; உன்னிடத்து நீங்காத அன்பு ஒன்றே வேண்டும் என்று கேட்கிற இவரைவிடச் சிறந்த அன்பர் வேறு யார் இருக்கமுடியும். இதே கருத்தைக் குலசேகரப்பெருமான் தம்முடைய திருமொழியில் பேசக் கேட்கிறோம்.

நிறைந்த செல்வத்தோடுகூடியதும், அரம்பையர்கனால் சூழப்பட்டிருப்பதும் ஆன இந்திரப் பதவியோ, அல்லது இந்தப் பூவுலக ஆட்சியோ எனக்கு வேண்டாம். அழகிய சோலைகளையுடைய திருவேங்கட மலையில் உள்ள பல சுனைகளில் மீனாகப் பிறக்கும் பேறு கிடைத்தால் போதும் என்று பேசுகிறார் அப் பேரன்பர்.

இந்த உலகத்தில் இருந்துகொண்டு மனமாற ஆண்டவனை வழிபடக் கூடுமேயானால், இதைவிட மோட்ச உலகங்கூடத் தேவையில்லை என்று சொல்லிச் சென்ற இந்த அடியார்களின் மன உறுதியை என்ன என்று சொல்ல முடியும்!

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ

வான் ஆளும் செல்வமும் மண்-அரசும் யான் வேண்டேன்

தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே


திருமங்கை மன்னன் தம்முடைய நெஞ்சை நோக்கி நல்ல அறிவுரை கூறுகிறார். இந்திரன் முதலிய தேவர்களுக்கு முதல்வனை, பூதங்களுக்கெல்லாம் தலைவனை, திசைகள், சூரிய சந்திரர் முதலியோர்களுக்கெல்லாம் தலைவனை, எப்பொழுதும் நிலைத்து மறவாது இருப்பாயேயானால், வாழ்நாளெல்லாம், பக்தி நிலைக்க வேண்டுமானால் ஆண்டவனுடைய திருவடியை நிலைப்பது தவிர வேறு ஒன்றும் வழியில்லை என்பது நன்றாக விளங்கும்.

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை

இருநிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்

செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகி

திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி

அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா

அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த

மந்திரத்தை மந்திரத்தால் மறவாதென்றும்

வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சம்மே

பக்தியோடு கூடி, தினம் உன் திருவடிகளத் தொழுது, உள் திருப்புகழைப் பேசி, மலர்களால் உன் திருவடியை அர்ச்சித்து, நல்ல அன்பர்களோடு கூடி, நீ வாழும் மலையை வலம் வந்து, நல்முறையில் வாழ். நானோ அப்படி செலுத்தாமல் என் வாழ்நாளை வீணாக்கி விட்டேனே  என்று அருணகிரியார் கதறுகிறார்.

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை

உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை

உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா

உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்

     விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்

          உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன்.


(தருமபுரம் ஆதீனம் நடத்தி வந்த ஞானசம்பந்தம் என்ற இதழின் வெள்ளிவிழா மலரில் 1965 ல் அ. ச. ஞானசம்பந்தன் எழுதிய கட்டுரை)

Comments

Popular posts from this blog

காரைக்காலம்மை கட்டுரை 1 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு

கசிந்துள்ளுருகும் நலம் - தாமரைக்கண்ணன்