சுந்தரரின் திருப்புகலூர் திருப்பதிகம் - டாக்டர் மணிமேகலை

பன்னிரு திருமுறையில் முதல் ஏழு திருமுறைகளும் தேவாரம் என்று வழங்கப்படுகின்றன.இத்தேவாரத் திருப்பதிகங்களை ஓதும் முறைக்குப் பண்முறை எனவும் தலமுறை எனவும் வரலாற்று முறை எனவும் வழங்கி வருகின்றனர். பண்முறை எனப்படுவது தேவாரம் பாடிய அருளாளர்கள் அப்பதிகங்களுக்குப் பண்களை அமைத்துப் பாடியுள்ளனர் .அப்பண்களுக்குரிய திருப்பதிகங்களை வரிசையாக அமைத்து வழங்கும் முறையாகும் தலமுறை என்றால் தில்லைப் பெருங்கோயிலை முதன்மையாக வைத்துத் தலங்களுக்குரிய பதிகங்களை வரிசையாக அமைத்து வழங்குவதாகும். வரலாற்று முறை என்றால் மூவர் வழிபட்டுச் சென்ற அடிச்சுவட்டில் தலங்களை வரிசைப் படுத்துவதாகும். சுந்தரர் பாடிய பாடல்களில் இன்று கிடைத்திருக்கும் பதிகங்கள் நூறாகும்.ஒவ்வொரு தலத்திற்கும் நேரடியாகச் சென்று பாடிய பாடல்களும் ஒரு தலத்திலிருந்து மற்றொரு தலத்தை நினைத்துப் பாடிய பதிகங்களுமாக அவை அமைகின்றன.சுந்தரரின் பாடல்கள் ஏழாம் திருமுறையில் இடம் பெறுகின்றன. அதில் திருப்புகலூர் திருத்தலத்திற்கு உள்ள பதிகத்தை மட்டும் இக்கட்டுரை ஆய்கின்றது. முன்னுரை சோழவள நாட்டின் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள எழுபத்தைந்தாவது சிவத்தலம் திருப்புகலூர் ஆகும். நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் கோட்டத்தைச் சார்ந்த இத்தலத்திற்குச் செல்வதற்கு அடையாளமாக சாலை ஓரத்திலேயே திருவளைவு காணப்படுகிறது.சுற்றிலும் அகழியால் சூழப்பட்ட பெருங்கோயிலாக உள்ளது.அனைத்து உயிர்களும் இறைவன் திருவடியைப் புகலிடமாக அடைக்கலமாக அடைகின்ற இடம் என்ற பொருளில் காரணப் பெயராக ஊரின் பெயர் அமைந்துள்ளது.புன்னாக வனம்,சரண்யபுரம், ரத்னாரண்யம் என்ற பெயர்களைப் புராணங்கள் இவ்வூருக்கு வழங்குகின்றன. இறைவன் பெயர் கோணப் பிரான்,அக்னிபுரீஸ்வரர்; இறைவி கருந்தாள் குழலியம்மை. இறைவன் இறைவி திருப்பெயர்கள் தேவாரங்களில் `கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினைய' `கருந்தாள் குழலியும் தாமும் கலந்து' என்பன அம்மையப்பர், திருநாமங்களை அறிவிக்கும் அகச்சான்றுகளாக உள்ளன. கோயிலுக்கு தென்புறம் முடி கொண்டான் ஆறு ஓடுகிறது.புன்னைமரம் தலவிருட்சமாக உள்ளது `புன்னைப் பொழிற்புகலூர்`, `புன்நாகம் மணங் கமழும் பூம்புகலூர்` என்ற திருமுறைகள் இதற்கு மேற்கோள்களாக அமைகின்றன. இராஜஇராஜ சோழன் காலத்தில், 'சத்திரிய சிகாமணி வளநாடு' என்றும் 'மும்முடிச்சோழ வளநாடு' என்றும் வழங்கப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு நித்திய பூசைக்கு அவர் நிவந்தம் தந்துள்ளமையையும் அறியமுடிகிறது. முதற்குலோத்துங்கன் காலத்திலும் அதற்குப் பின்பும்' குலோத்துங்க சோழ வளநாடு' என்று அழைக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் வேளக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்திற்கு இக் கோயில் உட்பட்டதாக உள்ளது. திருப்புகலூர் பதிக வரலாறு திருஞானசம்பந்தரின் இரண்டு பதிகங்களும் திருநாவுக்கரசரின் ஐந்து பதிகங்களும் சுந்தரரின் ஒரு பதிகமுமாக எட்டு செந்தமிழ்த் திருப்பதிகங்கள் இத்தலத்திற்குரிய தேவார ஆவணங்களாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. திருநாவுக்கரச நாயனார் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்த சிறப்புக்குரிய தலமாகும். இத்தலத்தில் வாழ்ந்த முருக நாயனார் திருமடத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சிறுத்தொண்டர், திருநீலநக்கர், முருக நாயனார் ஆகியோர் கூடியிருந்து மகிழ்ந்து பேசிய செய்தியைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் சுட்டுகின்றார்.அரசினர் அறுபத்தேழு கல்வெட்டுகளை இத்திருக்கோயிலில் படி எடுத்துள்ளனர் இத்தலத்துக் கல்வெட்டு திருநாவுக்கரசரை 'குளிச்செழுந்த நாயனார்' என்றும் முருக நாயனார் திருமடத்தை 'நம்பி நாயனார் திருமடம்' என்றும் குறிப்பிடுகின்றது. எனவே முருகநாயனார் பிறந்த தலமாகவும் திருநாவுக்கரசப் பெருமான் தீந் தமிழ்த் திருப்பதிகம் விண்ணப்பித்து முக்தியடைந்த தலமாகவும் இறைவன் சுந்தரரின் மிஞ்சு தமிழ்ப்பாட்டிற்குப் பொற்கட்டிகளைப் பரிசளித்த தலமாகவும் இவ்விடம் சிறந்துள்ளது. சுந்தரர் திருப்பாட்டு சுந்தர பெருமான் திருவாரூரில் இருந்தபோது பங்குனி உத்திரத் திருவிழா நெருங்கி வரவிருந்தது சுந்தரரின் மனைவியார் பரவைப் பிராட்டியார் திருவிழாவிற்கு உரிய அறங்களைச் செய்வதற்கும் குறைவின்றி அனைவருக்கும் கொடுத்து மகிழவும் விரும்பினார். அச் செலவுக்குப் பொருள் தேவைப்பட்டது .திருவிழாவை செம்மையாகச் செய்ய செலவுக்குப் பொன் கொண்டு வரும் பொருட்டுத் திருப்புகலூர் தலத்திற்கு வந்தார் சுந்தரர். திருக்கோயிலில் உள்ள இறைவனைப் பணிந்து வணங்குகிறார். அதன் பின்னர் களைப்பு மிகுதியால் திருக்கோவிலுக்கு அண்மையில் உள்ள திருமடத்திற்குச் சென்று அடியார்களுடன் ஓய்வு கொண்டு இளைப்பாறுகின்றார். இந்நிலையில் அவருக்கு உறக்கம் வரத் தொடங்குகின்றது. திருக்கோயிலின் திருப்பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த செங்கற்கள் சிலவற்றை அடுக்கி அவற்றைத் தம் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு அதன் மீது பட்டு மேலாடையை விரித்துத் துயில் கொண்டார். உடன் வந்திருந்த தொண்டர்களும் துயின்றனர் . அனைவரும் துயில் நீங்கி எழுந்தனர் அப்போது சுந்தரர் தலையணையாக வைத்திருந்த செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு வியந்தனர்.மனம் உருகிய சுந்தரர் திருப்புகலூர் இறைவனின் திருவருளை நினைத்துப் பாடிய தமிழ்ப் பாமாலை ஆகும் இப்பதிகம். புலவராற்றுப்படை தான் பெற்ற பெருவளத்தைப் பிறரும் பெறுமாறு செய்வது பேரரமாகும் .இதனை அக்காலத்தில் உலகியலில் வாழ்ந்தோரும் செய்தனர் அருளியலைக் கடைபிடிப்போரும் செய்தனர்.சுந்தரர் இறைவன் தனக்கு அளித்த வளத்தைப் பிறரும் பெற வேண்டும் என்ற ஆவலுடன் புலவர் ஆற்றுப்படையாக இப்பதிகத்தை இயற்றியுள்ளார். ஆற்றுப்படை என்றால் வள்ளலிடம் பரிசு பெற்ற புலவன் ஒருவன்தான் பரிசு பெற்ற தலைவரின் இயல்பு இருப்பிடம் கொடை முதலியவற்றைக் கூறித் தலைவனிடம் சென்று பரிசில் பெறுமாறு அறிவுரை கூறி ஆற்றுப்படுத்துவது ஆகும். தன் திறமையைக் கண்டு பாராட்டும் பரிசும் முறையாகத் தருகின்ற வள்ளல்களை நாடிச் செல்வதுதான் புலவர்களின் வாழ்க்கை. இதனை "வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை" என்று புறநானூறு குறிப்பிடும் .சுந்தரர் தமிழ்ப் புலவர்கள் குறித்து அதிக கவனம் கொள்பவர் ஆவார். "கற்ற பெரும் புலவாணர் அல்லல் பெரிதும் அறுப்பான்" (7-73 - 3) "பாடும் புலவர்க்கு அருளும்பொன் "(7 - 4 - 5 ) "கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் மிடர்தீர்க்கும் ( 7 -30 - 11) என்று தமிழ்ப்புலவர் நிலை குறித்துப் பாடியுள்ளார். "என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள் மன்னா மனிசரைப் பாடிப்படைக்கும் பெரும் பொருள் " என்று பெரியாழ்வார் தம் திருமொழியில் புலவர்களை நோக்கி சலித்துக்கொள்கிறார். புகழ் விருப்பம் உடையவராக இறைவனைக் கூறுகின்றார் சிவப்பிரகாச சுவாமிகள். "ஆயினுந் தன்னை நீபுகழ்ந் துரைத்த பழுதில் செய்யு ளெழுதின னதனாற் புகழ்ச்சி விருப்பன் போலும் இகழ்ச்சி யறியா வென்பணி வானே". (பா. 24 நால்வர் நான்மணிமாலை, சிவப்பிரகாச சுவாமிகள்) மாணிவாசகர் சொல்லச் சொல்ல திருவாசகத்தைப் பேராசையோடு ஈசன் தன் கைப்பட எழுதிக்கொண்டார். தன்னைப் புகழ்ந்து பாடிய நூலாதலால் அதனை உலகம் எல்லாம் உவந்து காணவேண்டும் என்னும் நசையினாலேயே அவ்வாறு விழைந்து செய்தார்; ஆகவே அவர் புகழ்ச்சி விருப்பன் போலும் என்று கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர் புகழ்ந்து பாடுகிறார். பழம் உள்ள மரத்தை நாடிச் செல்லும் பறவைகளைப் போன்றவர்கள் புலவர்கள்.தம் புலமையை மதிக்காத செல்வத்தை அவர்கள் விரும்புவதில்லை. முத்தமிழ் நலஞ்சேர்ந்த பக்தி மிகுந்த புலவர்கள் பேரவைக்குச் சுந்தரர் பெருமான் தருகின்ற அறிவுரைப் பெட்டகமாக இப்பதிகத்தைக் கருதலாம். தொண்டை நாட்டில் தோன்றிய சுந்தரர் சேர, சோழ, பாண்டிய மற்றும் ஈழ நாட்டிற்கும் பதிகங்கள் பாடியுள்ளார். கொடுத்துதவாத பொய்மையாளர்கள்

தம்மை நாடி வரும் புலவர்களுக்கும் வறியவர்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்று எண்ணமின்றி அவர்களது புகழ் மொழிகளை மட்டும் கேட்க விரும்புபவர்களைச் சுந்தரர் கண்டிக்கின்றார் .பிறருக்கு மறந்தும் கூட உதவி செய்ய விரும்பாத மனமுடையவர்கள் தமக்கு அடிமைகளைச் சேர்த்துக் கொள்வார்கள். அதன் பின்னர் அவர்களைத் தம்மைப் புகழுமாறு பேசச் செய்து கேட்டுக் களிப்பார்கள். தங்களுக்கு விருப்பமான புகழ் மொழிகளை மட்டுமே பேசுவதற்கு அனுமதிப்பார்கள். தான் விரும்பியவற்றைக் கேட்ட பிறகு அந்த புலவர்களுக்கு இம்மி அளவு கூட பொருள் தர மாட்டார்கள்இவர்களை 'தருகிலாப் பொய்மையாளர்' என்கிறார் சுந்தரர் தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ் சார்கி னுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மை யேதருஞ் சோறுங் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே. ( 7.34.1)

பொய் கூறிப் பிழைத்து வாழ்கின்ற வாழ்வை மிகக் கடுமையாக சாடுகிறார் சுந்தரர். சற்றும் வலிமையற்ற ஒருவனைத் தாழ்ந்து வணங்கி மல்யுத்தம் செய்கின்ற பீமனைப் போன்ற வலிமையுடையவன் என்றும் வில் வித்தையில் வல்லவராகிய அர்ஜுனன் போன்ற வீரம் உடையவன் என்றும் பொய் கூறுதல் தகாது .கொடுப்பதற்கு மனமே இல்லாத ஒருவனைப் பார்த்து கூசாமல் செந்தமிழ் நாட்டு வள்ளல்களில் ஒருவனாகிய பாரி போன்றவன் என்று பொய்யாகக் கூறினாலும் பொருள் கொடுப்பவர்கள் இல்லை மிடுக்கி லாதானை வீம னேவிறல் விசய னேவில்லுக் கிவனென்று கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று கூறி னுங்கொடுப் பாரிலை (7.34. 2) மிகச்சிறிய பொருளுக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுபவற்றுள் ஒன்று எள். அந்த எள்ளில் ஒன்று கீழே விழுந்து விடுமாயின் அதனை எடுக்காமல் விட்டுவிடுவர். ஆனால் பொருளைப் பதுக்கி வைக்கும் குணமுடையவன் அந்த எள் எத்தனை கூட்டமான இடத்தில் விழுந்து இருந்தாலும் பெரும் முயற்சி செய்து தேடி எடுத்து விடுவான் . மற்றொருவன் ஈக்கு கூட ஈயாதவன் என்கிறார். ஈ ஓர் மிகச் சிறிய உயிராகும். சிந்திக் கிடக்கும் உணவின் மீது அது அமர்ந்தாலும் அதனால் முழுமையாக உண்டு விட முடியாது. அதனை எடுத்துச் சொல்லவும் அதனால் முடியாது. அந்த ஈ உண்டு விடக் கூடாது என்று சிந்திய உணவை மீண்டும் எடுத்துச் சேர்க்கின்ற குணமுடையவனிடம் சென்று பொய் மொழி கூறுவதைக் கண்டிக்கிறார். தங்களைக் காப்பதற்குப் பொருளை அள்ளி வீசும் வள்ளல் என்றும் வறுமைத் துன்பத்திலிருந்து தடுத்துக் காப்பவன் என்றும் வாழ்த்தினாலும் இம்மியும் கொடுக்க மாட்டான் . அதே போல் நொய்யரிசி என்பது சிறு மணல் அளவில் இருப்பது. அந்த நொய்யரிசியின் அளவு கூட பிறருக்கு ஈயாதவனை நோக்கிப் புலவர் பெருமக்களுக்கு எல்லாம் தாய் போன்றவன் என்று பாராட்டினாலும் ஒரு செப்புக்காசு கூடக் கொடுத்து உதவ மாட்டான்.என்ன பொருள் கிடைத்தாலும் தன்னந்தனியனாய் தானே உண்டு களித்து ஈரக் கையைக் கூட விதிறாதவனை நோக்கி மெய்யடியார்களுக்கும் இறந்து தெய்வமாகிவிட்ட முன்னோர்களுக்கும் விருந்தளித்துப் போற்றிப் பரவும் புண்ணியனே என்று வாயாரப் பொய் கூறிப் புகழ்ந்தாலும் கொடுக்கும் மனம் அங்கு இல்லை. வஞ்சகரை வாழ்த்துதல் கூடாது பிறரை ஏய்த்துப் பெரும்பொருள் திரட்டுவதற்காக இடைவிடாது வஞ்சக எண்ணம் நிறைந்த நெஞ்சமும் வாய்மைக்கு மாறானவற்றைக் கூசாமல் பேசும் நாவையும் பாவச் செய்கையும் குரு நிந்தனை செய்வதற்கு அஞ்சாமையும் ஆகிய குணங்கள் பொருந்திய ஒருவனிடம் சென்று நலமும் வளமும் முற்றும் பொருந்திய சான்றோன் என்று வழிந்து பேசினாலும் அவனிடமிருந்து பெறுவது அரிதான செயலாகும்.கல்வி கற்காதவன் அறிவும் ஒழுக்கமும் இல்லாதவன் தெய்வ நாட்டமற்றவன் ஆகியோரிடம் சென்று பல பாராட்டி சொல்லிக் கூறினாலும் அவர்கள் இயல்பு மாறாது புகலூர் பாடுமின் புலவீர்காள் சுந்தரர் பெருமான் புலவர்கள் யாரிடமெல்லாம் கையேந்தி நின்று இரக்க கூடாது என்பதைப் பட்டியலிட்டுக் கூறியுள்ளார்.அதே நேரத்தில் திண்ணமாக ஐயமின்றி யாரைப் பணிந்து வாழ்த்த வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்தியுள்ளார் அனைத்து உயிர்க்கும் தந்தையாகிய திருப்புகலூர் சிவபெருமான் திருவடிக்கு அன்புடன் மனம் கசிந்து பாடுகின்றவர்களுக்குக் கை மேல் பலனாக உடனுக்குடன் கிடைக்கும் செல்வங்கள் ஏராளம்.இப்பிறவியில் உண்பதற்கு நல்ல உணவும் உடுத்துவதற்கு அழகான ஆடைகளும் தந்து காப்பான். நம் வினைகளால் ஏற்பட்ட இடர்கள் இப் பிறவியிலேயே நீங்கும் . உடம்பு நீங்கிய காலத்தில் சிவலோகத்தை ஆளுகின்ற நிலையும் கிட்டும். திருவருளினால் பேரின்பம் எய்துவதற்கு ஒரு சிறிதும் ஐயமில்லை. எனவே பொய்மை பேச்சு கொண்ட புன்மையாளர்களைப் பாடுதலை விடுத்துப் புகலூர் இறைவனைப் பாடுமாறு புலவர்களுக்குக் கட்டளையிடுகின்றார் சுந்தரர். கொடுத்து உதவாத மனிதர்களின் தலைவாசலில் சென்று துன்பத்துடன் கால் தடுக்க நின்று கண் பஞ்சடைந்து குழி விழுந்து மெலியாமல் திருப்புகலூர் இறைவனைப் பாடினால் சிறிதும் வருத்தமற்ற வாழ்வை வழங்குவான்.திருப்புகலுரை நலமுறப்பாடும் புலவர்களுக்கு அழகிய சிவ வடிவமும் சிவலோகமும் கிட்டும். அது மட்டும் இன்றி இவ்வுலகிலும் அவ்வுலகிலும் தலைமை பெற்று இன்பமுடன் இருக்கலாம். நிறைவாக நீரும் நிலமும் வளம் பெற்றுச் செழிப்புற்ற வயல்களில் தாமரை முதலாகிய பூக்கள் பூத்து விளங்குகின்ற அழகிய திருப்புகலூரில் கோயில் கொண்டிருக்கும் செல்வர் சிவபெருமான் ஆவார். அவரைத் திருநாவலூர் என்னும் ஊரில் திருவருளால் தோன்றிய சடையனாரின் மகனாகிய வனப்பகையின் தந்தை ஆகிய வன்தொண்டர் என்று அழைக்கப்படும் சுந்தரர் பாடிய திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் ஓதி உள்ளம் உருகும் தகுதியுடைய மெய்யன்பர்கள் அறமே வடிவமாகத் திகழும் இறைவனின் திருவடியில் அனைத்து நலங்களையும் பெற்றுப் பேரின்ப வாழ்வு வாழ்வதற்கு எந்த ஐயமும் இல்லை.

முனைவர் இரா.மணிமேகலை இணைப்பேராசிரியர் தமிழ்த் துறை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் - 29

Comments

Popular posts from this blog

காரைக்காலம்மை கட்டுரை 1 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு

கசிந்துள்ளுருகும் நலம் - தாமரைக்கண்ணன்