காரைக்காலம்மை கட்டுரை 1 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

 மயிலை கபாலீஸ்வரர் கோவில் பிராகாரத்தில் கோசாலை அருகே கோவிலின் தலவிருட்சம் புன்னை மரம். சுற்றி வருகையில் அந்த மரத்தைப் பார்க்கும்போது சங்கப்பாடல்களில் முடத்தாள் புன்னை என புன்னைக்கு முன்னொட்டாக சொல்லப்படும் முடத்தாள் எனும் சொல் காட்சியாக கண்முன் நிற்பதை உணர்ந்தேன். ஒரு நொடி உள்ளே சில்லென ஆனது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த ஒரு காலத்திலிருந்து எழுந்து வந்த சொல் இன்றும் பிரத்யட்ச பிரமாணமாக , கண்முன் மெய்யென துலங்கி நிற்கும் அதிசயத்தை கவிதை நிகழ்த்தியதா, இயற்கை நிகழ்த்தியதா, காலம் தாண்டி மானுட மனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிக் கொண்ட மீமனம் எனக்குள் வந்து என் உணர்வை தொட்டுச் சென்றதா... அந்த ஆய்வை விட வளைந்த தண்டோடு மட்டுமே நின்ற, நிற்கும் அதுவரை நான் கண்ட அனைத்து புன்னைகளும் ஒருசேர நினைவில் எழும் அழகின் பாரத்தால் கால்கள் தொய்ய அமர இடம் தேடினேன். புன்னையின் நிழலிலேயே சிறு மண்டபம். அம்மை உமை மயில் வடிவில் அப்பன் சிவனை பூசித்த காட்சி கல்லில் வடிக்கப்பட்டு அதற்கென கட்டப்பட்ட தனிச் சன்னதி. அந்த சன்னதியிலிருந்து நீண்டு நாலுக்கு நாலு என கட்டப்பட்ட நந்தி மண்டபம். அதன் விளிம்பில் புன்னையைப் பார்த்தவாறே அமர்ந்தேன். உளம் பொங்கியிருந்த அந்த நிலையில்தான் பேயம்மை வந்தென்னை ஆட்கொண்ட தருணம்.

அந்த மண்டபத்தின் முன்புற சன்னதிச் சுவர்களின் இருபுறமும் சலவைக்கல் பதித்து அதில் சில திருமுறைப் பாசுரங்கள் செதுக்கப்பட்டிருந்தன. வெறுமே அவற்றை கண் தடவி நகர்ந்தபோது “கண்ணாளா ஈதென் கருத்து” எனும் வரியில் சிக்கியது மனம் மறுபடியும். யாரிது, இவ்வளவு பணிவுடனும், உறுதி குலையாமலும், மீறும் அன்பாலும் ஒற்றை வரியில் சொல்வது?  

“கண்டெந்தை என்றிறைஞ்சிக்

  கைப்பணியான் செய்யேனேல்

அண்டம் பெறினும்

  அதுவேண்டேன் - துண்டஞ்சேர்

விண்ணாளுந் திங்களாய்

  மிக்குலகம் ஏழினுக்கும்

கண்ணாளா ஈதென் கருத்து”

அதுவரை வாசித்த பிரபந்தப் பாடல்கள் வந்து இவ்வரிகளுக்கு இணை அமர முண்டியடித்தன. “அச்சுவை பெரினும் வேண்டேன்” என்ற தொண்டரடிப் பொடியாழ்வாரின் குரல் முந்தி வந்து நின்றது. கவிஞர் யாரெனப் பார்த்தேன். அதுவரை பெயராக, புராணக் கதையாக, ஆங்காங்கே ஓரிரு வரிகளாக மட்டுமே நான் அறிந்த காரைக்காலம்மை. பேய்க்கோலம் நமக்கும், தாய்கோலம் அப்பனுக்கும் பூண்டு விளங்குபவள். அவள் இசைத்த “அற்புதத் திருவந்தாதி” யின் சில பாடல்கள் அவை என கல்வெட்டு உறைத்தது.  

“அற்புதத் திருவந்தாதி”- பெயர்தான் எவ்வளவு பொருத்தமானது. 101 பாடல்கள் கொண்ட நூல். இந்திய அளவில் பக்தி இயக்கம் பெருகி வளர்ந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதன் தோற்றுவாயாக விளங்கியது தமிழ் கவி மரபில் வந்த பக்தி இலக்கியங்கள் என்பது அறிஞர்களால் சுட்டப்படுவது. அதிலும் முதன்மை மூவர் என சொல்லப்படும் காரைக்காலம்மை, சேரமான் பெருமாள், முதலாழ்வார்கள் மூவர் ஆகியோரில் முதலில் இருப்பது காரைக்காலம்மைதான். மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக மதிப்பிடப்படும் காரைக்காலம்மை இயற்றிய பாடல்களின் புதுமை மாறாத் தன்மை இன்று வரை மாறாததாய் இருக்கிறது.

சைவ பக்தி மரபுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த பக்தி இலக்கியத்துக்கே முன்னோடியாய் இருக்கும் அம்மையின் பாடல்களில் இறைவனை முக்திக்கு மட்டுமே நாடும் பாங்கு இல்லை. உயிரின் இயற்கை இறையை நாடுதல் எனும் இயல்பான தன்மையே பல பாடல்களிலும் காணப்படுகிறது.   

“எமக்கிதுவோ பேராசை

  யென்றுந் தவிரா

தெமக்கொருநாள் காட்டுதியோ

  எந்தாய்” என அத்தனை இயல்பாய் தந்தையிடம் தின்பண்டம் கேட்கும் குழந்தையின் தன்மையில் கேட்கிறாள் அம்மை. முதல் பாடலை ஆரம்பிக்கும் விதமே இந்த இயல்புத் தன்மையை உயிரின் இயற்கை எனச் சொல்லும் வரிகளாக அமைந்து வருகிறது-

“பிறந்து மொழி பயின்ற

பின்னெல்லாம் காதல்

சிறந்துநின் சேவடியே

சேர்ந்தேன் “ – கல்வி கற்று அறிவு வளர வளர அவள் இறைவன் மேல் கொண்ட காதல் பெருகிக்கொண்டே போகிறது. கல்வியின் பயனாக ஒருவர் வந்து சேரும் இடம் எது என்ற கேள்விக்கு அம்மை சொல்லும் பதில் தெளிவாக இருக்கிறது- அவன் திருவடி. மொழி பயின்ற பின் எனும் சொல்லுக்கு கல்வி கற்ற பின் என்ற பொருள் கொள்ளலாம். இன்னுமொரு பொருள் கூட வாசிக்கலாம். மொழி பயில்தல் என்பது ஒருவர் அடையும் நாகரீகம், சமூக வழக்கம், பொருளீட்டல் என அனைத்திற்கும் அடிப்படையான பிற மனிதர்களுடனான உறவினைக் குறிக்கும். இவை அனைத்துமே மொழியன்றி ஒருவருக்கு சாத்தியப்படுவது அரிது. ஆகவே பண்பினைக் கற்றாலும், கல்வியைக் கற்றாலும் அவற்றின் பயன் இறைவனின் சேவடியை அடைவதே என்பதை அம்மை சொல்லும் அழகு முதல்பாடலில் வருகிறது.

பக்தி நெறியில் ஒருவர் ஈடுபடுவது சிறப்புத் தகுதி அன்று. அது உயிரியற்கை என்பது சைவ சித்தாந்தம் பேசும் பொருள். சிற்றறிவு கொண்ட பசு தன்னிலும் மிக்க முற்றறிவு உடைய பதியையே நாடிச் செல்வது இயற்கை. அறிவு அறிவினையே நாடும். ஆனால் அவ்வாறு நாடாத நிலை பசுவுக்கு எப்படி வருகிறது? பாசத்தின் வினையால் என்கிறது சைவ சித்தாந்தம். ஆகவே இறைவன் மீது பக்தி என்பது பாசத்தை மீறிய ஒன்றாக இருக்க வேண்டியிருப்பதால் நம் நெஞ்சில் தோன்றும் பக்தி இறைவன் அருளால் தோன்ற வேண்டிய ஒன்று. ஆகவே அவன் நினைவு நமக்கு வருமானால் அது அவன் செய்யும் செயல். மாறாக நான் பக்தி செய்கிறேன் என்பதில் இருக்கும் “நான்” ஆணவத்தின் செயல்பாடுதான். சற்று பணிவான ஆணவம். ஆனால் அம்மைதான் முதலில் இதை எப்படி கையாள வேண்டுமென்று சொன்னவள்-

“தானே தனிநெஞ்சந்

  தன்னையுயக் கொள்வான்

தானே பெருஞ்சேமஞ்

  செய்யுமால்... ” என அவனே வந்து நம் நெஞ்சை உயக்கொள்ளுவான் என்கிறாள். ஆகவே தான் பெரும் நன்மை பெற விளையும் நெஞ்சு அவன் வருகைக்கு தன்னைத் தயாராக்கிக் கொள்ள வேண்டியது குறிப்பிடப்படுகிறது. தனி நெஞ்சம் என்ற சொல்லாட்சி உணர்த்தும் பொருள் சிறப்பானது. சரி, நெஞ்சத்தை பக்குவமாக்கிக் கொள்வதாவது “நான்” செய்ய முடிந்த செயலா என்றாள் அதற்கும் அம்மை பதில் தருகிறாள் –

“பண்புணர மாட்டேன்நான்

  நீயே பணித்துக்காண்” – ஆக முழுப் பொறுப்பும் இறைவனைச் சேர்ந்தது.

சித்தாந்தம் முழுமையாக நூலாக்கப்படுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாடப்பட்ட பாடல்கள் இவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இறைவன் மீது கொண்ட பக்தியும், கல்வியும், ஞானமும் கலந்த பாடல்கள்.

“அன்றுந் திருவுருவங்

  காணாதே ஆட்பட்டேன்

இன்றுந் திருவுருவங்

  காண்கிலேன் - என்றுந்தான்

எவ்வுருவோன் உம்பிரான்

  என்பார்கட் கென்னுரைக்கேன்

எவ்வுருவோ நின்னுருவம் ஏது”

அருவமாகவும், உருவமாகவும், அருஉறுவாகவும் விளங்குபவன் இறைவன் என்பதை தனது 36 தத்துவங்களில் முதல் 5 சிவதத்துவங்களில் சைவ சித்தாந்தம் விளக்கிப் பேசுகிறது. ஆனால் அம்மை அதற்கெலாம் முந்தைய காலத்திலிருந்து இப்பாடலைப் பாடுகிறாள். ஆட்பட அவளுக்கு அவன் உருவம் தேவையில்லை. “காணாதே ஆட்பட்டேன்” என்றுதான் சொல்கிறாள். சரி, ஆட்பட்ட பின்னுமாவது அவன் காட்சி கிடைத்ததா என்றால் “இன்றும் காண்கிலேன்” என்றுதான் சொல்கிறாள். ஆனால் இதன் காரணத்தால் அவள் அவனிடம் கொண்ட பெருங்காதலில் துளியும் குறைவுபடவில்லை. அவள் அவன் உருவம் காட்ட விழைவது “எவ்வுருவோன் உம்பிரான்” எனக் கேட்போருக்காகத்தான். உருவு காண விழைவோருக்கு உருவும், அருவமாய் வணங்குவோர்க்கு

“காதலாற் - காண்பார்க்குச்

சோதியாய்ச் சிந்தையுளே

  தோன்றுமே தொல்லுலகுக்

காதியாய் நின்ற அரன்” என்றும் காட்டித் தருகிறாள் அம்மை.

(தொடரும்)    

Comments

  1. அருமையான தொடக்கம்..

    நெடிய தொடராக வளர வேண்டும்🙏🏾

    "அறிவு அறிவினையே நாடும். ஆனால் அவ்வாறு நாடாத நிலை பசுவுக்கு எப்படி வருகிறது?" -- இந்த வினாவில் இருந்து அருமையான புள்ளியை நோக்கி செல்கிறது.. 👏🏾👏🏾👏🏾

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு

கசிந்துள்ளுருகும் நலம் - தாமரைக்கண்ணன்