காரைக்காலம்மை கட்டுரை 2 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

காரைக்காலம்மை கட்டுரை - 1

சித்தாந்தம் என்ற பொதுச்சொல் தமிழ் ஆன்மிக மரபில் சைவ சித்தாந்தத்தையே சுட்டி நிற்கும். ஆதியிலிருந்து வரும் மரபு என சைவர்கள் பற்றின் மிகுதியால் சொன்னாலும் ஐந்தாம் நூற்றாண்டை சித்தாந்தத்தின் துவக்கமாக் கொள்வது ஆய்வுகளின் முடிவு. ஆனால் காரைக்காலம்மை இந்த காலத்திற்கும் முற்பட்டவர் என்பது நினைவில் இருத்த வேண்டிய ஒன்று. ஆகவே சித்தாந்தம் பின்பற்றி ஒழுகுவதற்கான நியம, நிட்டைகளை வலியுறுத்தி, வணங்கத்தக்க இறைவனின் பண்பு நலன்களை வரையறுத்து சொல்லும்போது உருவாகி வரும் சிவத்தை  அம்மையிடம் காண முடியாது. வரையறைக்கு உட்பட்ட சிவமும், அதனை மீறி எழும் பரசிவமும் அம்மையிடம் மாறி மாறி வெளிப்படுவதைக் காணலாம். 

இதுவன்றே ஈசன் 

  திருவுருவம் ஆமா

றிதுவன்றே என்றனக்கோர் 

  சேமம் - இதுவன்றே

மின்னுஞ் சுடருருவாய் 

  மீண்டாயென் சிந்தனைக்கே

இன்னுஞ் சுழல்கின்ற திங்கு. 

அம்மையின் ஆழுள்ளத்தில் பரசிவம் தன்னைக் காட்டிக் கொண்ட வடிவை தன் நினைவாலே மீள மீள சிந்திக்கும் காரைக்காலம்மைக்கு அவன் தோன்றும் வடிவம் “மின்னுஞ் சுடருருவாய்” தெரிகிறது. அம்மையின் கனிந்த ஞானம் வெளிப்படும் இடம் நுட்பமானது. இறைவனின் வடிவம் அவருக்கு மின்னும் சுடரென வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. வைணவ சித்தாந்தத்தில் பரம் எனும் நிலையில் நாராயணன் யோகியர் தியானிக்கும் ஜோதி வடிவில் இருப்பான் எனச் சொல்லப்படுகிறது. அம்மைக்கு இறைவன் அவ்வாறே வெளிப்பட்டாலும் அவர் அடுத்து சொல்வதுதான் சிறப்பு- என் சிந்தைக்கு இவ்வாறாய் நீ வருகிறாய் என்கிறார். கூடவே ஆம், இதுவே அவன் உருவம், இந்த உருவில் அவனைக் காண்பதே எனக்கு சேமம் என்கிறார். எங்கும் இறைவன் உருவம் இன்னதென்று வரையறுக்காமல் அதே நேரம்  தனக்கு வெளிப்பட்ட வடிவம் இதுவேயென்றும் கனிந்த ஞானத்தின் அடக்கத்துடன் சொல்கிறார். 

வைணவம் பரம்பொருளாகிய நாரணனுக்கு 5 நிலைகளை வகுத்து வைத்திருக்கிறது. பரம் எனும் நிலையில் ஜோதி வடிவாக விளங்கும் அதே பெருமான்தான் அர்ச்சை எனும் நிலையில் நாம் சீராட்டி தொட்டு தடவி அணைத்து மகிழும் சிலையாகவும் விளங்கி நிற்கிறான். இதில் பர நிலை உயர்ந்ததென்றோ, அர்ச்சை நிலை குறைப்பட்டதென்றோ வைணவம் பேதிப்பதில்லை. மாறாக அவ்வாறு பேதம் செய்வது பக்திக்குரிய லட்சணம் அல்ல என்கிறது. இந்த நிலையை இங்கு அம்மையிடம் காண முடிகிறது. பர வடிவை கண்டுணர்ந்த அம்மையின் ஞானம் மேலே சொன்ன பாடலைக் கண்டுணர்ந்து சொன்னது என்றால் அம்மையின் கனிந்த பக்தி வழியேயும் அவர் கண்டுணர்ந்த இறைவனை இப்படிச் சொல்கிறார்- 


ஞான்ற குழற்சடைகள் 

  பொன்வரைபோல் மின்னுவன

போன்ற கறைமிடற்றான் 

  பொன்மார்பின் - ஞான்றெங்கும்

மிக்கயலே தோன்ற 

  விளங்கி மிளிருமே

அக்கயலே வைத்த அரவு. 

நேரில் கண்ட காட்சி என இறைவனின் தோற்றத்தை வர்ணிக்கிறார் அம்மை. தொங்கும் சடைக்கற்றைகள், பொன் நிறம், கழுத்தின் விடக்கறை, அணிந்திருக்கும் அக்க மாலை,  கழுத்தை சுற்றிய பாம்பு என ஓவியம் வரையத்தக்க குறிப்புகளோடு சுடரென விளங்கிய அதே இறைவன் அம்மைக்கு வெளிப்படுகிறான். சுடர் வடிவென விளங்கும் இறையே இங்கு உருக்கொண்டு இலங்குவது. அம்மைக்கு இரு தோற்றங்களும் ஒரே இறையே என கனிந்த ஞானம் இருக்கிறது. ஆனால் இதைக் கேட்பவர்கள் அவர் ஞானத்தின் உயர்நிலையயை உணர்ந்திருப்பார்கள் என உறுதி இல்லை. ஆகவே அவரிடம் இம்முரண் குறித்து கேட்டால் அதற்கும் அம்மை விடை தருகிறார் -    

காண்பார்க்குங் காணலாந் 

  தன்மையனே கைதொழுது

காண்பார்க்குங் காணலாங் 

  காதலாற் - காண்பார்க்குச்

சோதியாய்ச் சிந்தையுளே 

  தோன்றுமே தொல்லுலகுக்

காதியாய் நின்ற அரன். 

இறைவன் அவனைக் காண விரும்பும் அடியவர்க்கு அவர்கள் தொழுவதற்கு விரும்பும் தோற்றத்தில் மட்டுமன்றி விரும்பும் தன்மையானவனாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான் என்று சொல்லும் அம்மை அப்படி அவனைக் காண விரும்புவோர் வெறும் விருப்பத்தால் அல்ல, பயன் கருதா காதலால் வரும் விருப்பத்தால் மட்டுமே காண முடியும் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். அப்படி அடியவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி ஒரு தோற்றம் கொண்டு வரும் இறைவன் அவனே அடியவர் சிந்தையுள்ளே வந்து  தோன்றும் காலத்தில் சோதியாய் தோன்றுவான் என்றும் அற்புதமாய் விளக்குகிறார். ஆக இறை தன்னை நம் சிந்தையில் வெளிப்படுத்திக்கொள்கையில் மின்னுஞ் சுடரென தோன்றினாலும் நம் விருப்பத்துக்கேற்ப, நாம் கற்பித்துக் கொண்ட தன்மையிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அருளியல்பு கொண்டது என்பதை அம்மை விளக்குகிறார். இப்பாடலை ஒரு மந்திரம் போல தொடர்ந்து வாசித்து வந்தால் இறைவன் அருவமா, உருவமா என்ற பயனற்ற மயிர் பிளக்கும் விவாதம் நம்மை அணுகாது. 

இத்தனைக்குப் பிறகும் வேடிக்கை மனிதரும், விந்தை மாந்தரும் நிறைந்த உலகல்லவா இது. சிந்தையால் உணர வேண்டியவற்றை  வெற்றறிவால் மட்டுமே புரிந்து கொள்ள நினைப்பவர்கள் அம்மையின் காலத்திலும் இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதனை கீழ்வரும் அம்மையின் பாடல் மூலம் அறிய முடிகிறது –

அன்றுந் திருவுருவங் 

  காணாதே ஆட்பட்டேன்

இன்றுந் திருவுருவங் 

  காண்கிலேன் - என்றுந்தான்

எவ்வுருவோன் உம்பிரான் 

  என்பார்கட் கென்னுரைக்கேன்

எவ்வுருவோ நின்னுருவம் ஏது. 

ஒரு அறிந்தமர்ந்த புன்னகையுடன் கூடிய கவிதை. காற்றை ஓவியமாக வரையச் சொல்லிக் கேட்பவரை எப்படி நிறைவு செய்ய இயலும்? காற்றை உணர வைக்க மரம், செடி, கொடி, கப்பல், அலை என வெவ்வேறு வடிவங்களில் காற்றின் சைதன்யங்களை சுட்டிக் காட்ட முடியும். அசையும் அவற்றினூடாக ஆட்டுவிக்கும் காற்றின் வலிமையை உணர்ந்து வியக்க முடியும். அறிந்து உணர்ந்தவர்கள் காற்றின் சைதன்யங்களிலும், காணா காற்றினையும் ஒன்றெனவே உரைப்பார்கள். ஆனால் உருவாக அருவைக் காட்டு என்போரிடம் அம்மையின் சொல்தான் துணை. 

நான் முன்பே( அன்று) அவனுக்கு ஆட்பட்டு விட்டேன். அப்படி அவனுக்கு ஆளென ஆகும்போது அவன் உருவைக் கண்டு ஆகவில்லை. அவன் அருளைக் கண்டு உணர்ந்து ஆளானேன் என்கிறார் அம்மை. ஆட்படும்போதும் அவன் உரு எனக்கு முக்கியமில்லை, ஆட்பட்ட பின்னும் உருவம் முக்கியமில்லை என்ற வரிகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் பொருள் கொண்டு புதிதென நிற்கும். இப்படி என்னைக் கேட்பவர்களுக்காகக் கேட்கிறேன், உன் உருவம் தான் எது என்று அம்மையும் அவர்கள் அறியாமையுடன் தன்னை தாழ்த்தி வைத்துக் கொண்டு கேட்கிறார். குழந்தையின் உயரத்துக்கு குனிந்து அமர்ந்து விளையாடும் தாயின் கருணையல்லவா அது? நான் சொல்லுகிறேன் என ஆணவம் இன்றி அன்னையர்க்கே உரிய கருணையுடன் அறியாமைக் குறும்பைப் பொறுத்து தானும் குழவியின் கேள்வியை வியந்து ரசிக்கும் பேரன்னை அல்லவா நம் அம்மை?  


(தொடரும்)


Comments

Popular posts from this blog

காரைக்காலம்மை கட்டுரை 1 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு

கசிந்துள்ளுருகும் நலம் - தாமரைக்கண்ணன்