பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு

"பேயாரும் அரசரும்" - "அம்மையும், அப்பரும்"

 திருப்பணிச் சக்ரவர்த்தி திருமுருக கிருபானந்த  வாரியார் சுவாமிகள் பழநியம்பதியில் எழுந்தருளி இருந்த போது, வானொலியில் திரையிசைப்பாடல் ஒன்றினைக் கேட்டார். அருகிலிருந்த விடுதிப் பணியாளரிடம் "இது யார் பாடிய பாடல் என்று கேட்டார். அதற்கு பணியாளரோ, பாடகரின்  பெயரினைக் குறிப்பிடாமல், பாடலுக்கு வாய் அசைத்த நடிகரின் பெயரினைக் குறிப்பிட்டார். இச்சம்பவம், வாரியார் சுவாமிகளுக்கு ஓர் உண்மையை உணர்த்தியது.

 திரைக்கு பின்னால் இருந்து பாடுபவர் ஒருவர், ஆனால் திரைக்கு முன்னிருத்து வாய் அசைப்பவரையே உலகம் பாடகராக எண்ணுகிறது. அதே போன்றுதான், பன்னிரு திருமுறையாசிரியர்களும் வாய் அசைத்தவர்களே என்றும், அவர்களை உள்ளிருந்து பாட வைத்தவர் ஒருவரே என்றும், அவரே நம்பெருமான் நாரிபாகன் என்றும் உணர்ந்தார்.

 ஆம், அன்பர்களே! அதனால்தான் பன்னிரு திருமுறையாசிரியர்களின் வாக்குகளில் முரண்பாடுகள் இல்லை. மேலும் திருமுறைப்பாடல்களுக்கு விளக்கங்கள் தனியே தேட வேண்டாம், அதற்குள்ளேயே அமைந்துள்ளது என்று தமிழ் கூறும் நல்உலகம் எங்கும் சென்று எடுத்துரைத்தார், தருமையாதினப்புலவர் தொல்காப்பியச் செல்வர் திரு.கு.சுந்தர மூர்த்தி அவர்கள்.

 அதன் அடிப்படையில், அம்மையப்பர் உணர்த்திய வண்ணம், "நம்மைப் பேணும் அம்மையாம்" காரைக்காலம்மையாரிடமும், "உடைய அரசு, "உலகேத்தும் உழவாரப் படையாளியாம்" திருநாவுக்கரசு நாயனாரிடமும் அமைந்துள்ள ஒற்றுமைகளை "அம்மையும் (காரைக்கால்  அம்மையார்) அப்பரும்" (திருநாவுக்கரசர்) என்ற தலைப்பில் சிந்தித்து இன்புறுவோமாக.

 இவ்வரிய சிந்தனைகளை, இருவரின் "வாழ்வும், வாக்கும்" என இரண்டு பகுதிகளாக, பகுத்துச் சிந்தித்து மகிழ்வோமாக.

வாழ்வு :

இரு திறத்தும் இம்பெற்றவர்கள்!-

அறுபத்து மூன்று நாயன்மார்களுள், பன்னிரு திருமுறைகள் பாடிய அருளாளர்கள் எழுவர். அவர்கள்,

1.எம்பிரான் திருஞானசம்பந்தர்
2.எம்பிரான் திருநாவுக்கரசர்
3.எம்பிரான் சுந்தரமூர்த்தி
4.எம்பிரான் திருமூலர்
5.எம்பிராட்டி காரைக்காலம்மையார்
6.எம்பிரான் ஐயடிகள் காடவர் கோன் நாயனார்
7.எம்பிராளன் சேரமான் பெருமாள் நாயனார்

ஆகியோர் ஆவர். அவ்வண்ணம், எம்பிராட்டி காரைக்காலம்மையாரும், எம்பிரான் திருநாவுக்கரசரும் இருதிறத்தும் இடம்பெற்ற சிறப்புடையவர்கள்.

பாடலும், சருக்கமும் :

'திருநின்ற செம்மையே" எனத் தொடங்கும், நான்காவது திருப்பாடலில் ( திருத்தொண்டத் தொகை) இருவரின் திருநாமங்களும் (திருநாவுக்கரையர், பேயார்) இடம்பெறுவதால், திருத்தொண்டர் புராணத்திலும் ஒரே சருக்கத்தில் (திருநின்ற சருக்கம்) இவர்களின் அருள் வரலாறு இடம்பெறுகின்றது.

திருநாமச்சிறப்பு :

இருவரின் திருநாமங்களும் இறைவன் திருவாய் மலர்ந்தருளிய தனிச்சிறப்பு உடையதாக அமைகின்றது.

"வருமிவள் நம்மைப் பேணும்
   அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
   பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
   அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
    உய்யவே அருளிச் செய்தார்."

     - காரைக்காலம்மையார் புராணம் - 58  
        பெரிய புராணம்

“அம்மையே” என்று இறைவன் திருவாய் மலர்ந்தருளிய சிறப்பினாலும், தோன்றிய தலத்திற்கும பெருமை சேர்த்திய காரணத்தாலும் எம்பிராட்டி புனிதவதியாரின் திருநாமம் “காரைக்காலம்மையார்” என்று சைவ உலகம் கொண்டாடி வருகின்றது.

அதே போன்று, எம்பெருமான் மருள் நீக்கியாரை, இறைவன் “நாவுக்கரசு” என்று திருவாய் மலர்ந்தருளிய வரலாற்றை,

“மேவுற்றஇவ் வேலையில் நீடியசீர்
   வீரட்டம் அமர்ந்த பிரானருளால்
பாவுற்றலர் செந்தமி ழின்சொல்வளப்
   பதிகத்தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கர சென்றுல கேழினும்நின்
    நன்னாமம் நயப்புற மன்னுகஎன்
றியாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவா
    னிடையேயொரு வாய்மை எழுந்ததுவே.”

திருநாவுக்கரசு நாயனார் புராணம் -74

என்னும் தெய்வச் சேக்கிழாரின் திருவாக்கால் நன்கு உணரலாம்.

வாழ்ந்த காலத்திலேயே இருவரின் திருநாமங்களும் கொண்டாடப்பட்ட சிறப்பு :

இப்பூவுலகில் வாழுங்காலத்தில் ஒருவரின் பெயர் கொண்டாடப்படுதல் அரிதாகும். அவ்வகையில் இவ்விரு அருளாளர்களின் திருநாமங்களும் போற்றப்பட்டது தனிச்சிறப்பாகும்.
காரைக்காலம்மையாரின் திருநாமத்தை, அவருடைய கணவனார் தன் பெண் குழந்தைக்குச் சூட்டி மகிழ்கிறார்.

“மடமகள் தன்னைப் பெற்று
   மங்கலம் பேணித் தான்முன்
புடனுறை வஞ்சி நீத்த
   ஒருபெரு மனைவி யாரைத்
தொடர்வற நினைந்து தெய்வத்
   தொழுகுலம் என்றே கொண்டு
கடனமைத் தவர்தம் நாமங்
   காதல்செய் மகவை இட்டான்.”

     -காரைக்காலம்மையார் புராணம்- 38
      பெரியபுராணம்

திருநாவுக்கரசரின் திருநாமத்தை அப்பூதியடிகளார் தம் பிள்ளைகளுக்குச் சூட்டியதோடு, பல்வேறு அறங்களை அவரின் பெயரால் செய்து மகிழ்கிறார்.

“வடிவுதாங் காணா ராயும்
   மன்னுசீர் வாக்கின் வேந்தர்
அடிமையுந் தம்பி ரானார்
   அருளுங்கேட் டவர்நா மத்தால்
படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப்
   பந்தர்கள் முதலா யுள்ள
முடிவிலா அறங்கள் செய்து
    முறைமையால் வாழும் நாளில்.”

     -அப்பூதியடிகள் நாயனார் புராணம்- 3


வடதிசைப் பயணமும், தென் திசை தரிசனமும் :

அடியவர் அறுபத்து மூவரில் வடதிசை நோக்கி கயிலையாத்திரை மேற்கொண்டவர்கள் மூவர்,

1.எம்பிராட்டி காரைக்காலம்மையார்
2.எம்பிரான் திருநாவுக்கரசு நாயனார்
3.எம்பிரான் காரி நாயனார்

இவர்களில் இருவருக்கும் (அம்மையாருக்கும், அப்பருக்கும்) அருட்காட்சி வழங்கியது மாதவம் செய்த தென்திசையில் என்பது தனிச்சிறப்பாகும்.

“கூடுமா றருள்கொ டுத்துக்
   குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர்
   நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண்
   டானந்தஞ் சேர்ந்தெப் போதும்
பாடுவாய் நம்மை என்றான்
   பரவுவார் பற்றாய் நின்றான்.”

     -காரைக்காலம்மையர் புராணம் -61

“தொழுதெ ழுந்தநற் றொண்டரை
   நோக்கிவிண் தலத்தில்
எழுபெ ருந்திரு வாக்கினால்
   இறைவர்இப் பொய்கை
முழுகி நம்மைநீ கயிலையில்
   இருந்தஅம் முறைமை
பழுதில் சீர்த்திரு வையாற்றிற்
   காண்எனப் பணித்தார்.”

* திருநாவுக்கரசு நாயனார் புராணம் – 369

உடல் பற்றினை ஒழித்தல் :

“வினைப்போகாமே ஒரு தேகம் கண்டாய்” என்பதற்கு ஏற்ப, வினையின் காரணமாக வருகின்ற உடற்சார்பிலிருந்து விலகியிருக்கவே அருளாளர்கள் விரும்புவார்கள்.

“வேற்று விகார விடக்கு உடம்பின் உள்ளிருக்கு ஆற்றேன்”
                  -எம்பிரான் மணிவாசகர்

அவ்வண்ணம், இருவரும் தங்களது உடலில் திருவருள் சார்பினைப் பெறுகின்றார்கள்.

“ஊனடை வனப்பை எல்லாம்
    உதறிஎற் புடம்பே யாக
வானமும் மண்ணும் எல்லாம்
   வணங்குபேய் வடிவ மானார்.”

    -காரைக்காலம்மையார் புராணம்-56.

“புன்னெறியாம் அமண்சமயத்
   தொடக்குண்டு போந்தவுடல்
தன்னுடனே உயிர்வாழத்
   தரியேன்நான் தரிப்பதனுக்
கென்னுடைய நாயகநின்
   இலச்சினையிட் டருளென்று
பன்னுசெழுந் தமிழ்மாலை
   முன்னின்று பாடுவார்.”

    -திருநாவுக்கரசர் புராணம் – 150.


இவ்வண்ணம், இருவரின் வாழ்வில் அமைந்த ஒற்றுமையைச் சிந்தித்தோம். அடுத்து “வாக்கு” குறித்துச் சிந்திப்போம் .

அம்மையப்பரின் அருள்வாக்கு

அன்பர்களே! இப்பகுதியில் "அம்மையும், அப்பரும்" என்ற தலைப்பில், எம்பிராட்டி காரைக்காலம்மையார், எம்பிரான் திருநாவுக்கரசர் ஆகியோரின் தவ வாழ்வில் அமைந்த ஒற்றுமைகளைச் சிந்தித்து உய்ந்தோம். தொடர்ந்து, இரண்டு பெருமக்களின் திருவாக்குகளிலும் அமைந்துள்ள ஒற்றுமைகளையும் சிந்தித்து இன்புறுவோமாக.

"காக்கும் கருணையாளன்" :

தன்னடி மறவாப் பண்பினரை, என்றும் காப்பவன் கயிலைநாதன். கைவிடமாட்டான் கனக சபாபதி என்பார்கள். அக்கூற்றை, இருவரின் திருவாக்குகளிலும் தெற்றென உணரலாம்.

"ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்."

    -திருவிரட்டைமணிமாலை

"மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந்
தாக்கு மைவர்த மாப்பை யவிழ்த்தருள்
நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சியே கம்பனே."

    -ஐந்தாம் திருமுறை

இறைவனின் இருப்பிடம் :

வாக்கு மனாதீத கோசரவாகிய பரம்பொருளை எங்கே காணலாம்? என்பதை, புல்லறிவினரும் உணரும் வண்ணம் இருவரும் எடுத்துரைத்துள்ளனர்.

இறைவனை எங்கும் தேட வேண்டாம். என் அறிவில் ஆனந்தமாய், நித்தமாய், நிமலனாய் நிறைந்துள்ளான். உயிருக்குள் உத்தமன் விளங்கி நின்றானே!

"வானத்தான் என்பாரும் என்க மற்றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன் நஞ்சத்தால் இருண்ட மெய்யொளிசேர் கண்டத்தால்
என் நெஞ்சத்தான் என்பன் யான்”,

   -அற்புதத் திருவந்தாதி

"தேடிக் கண்டுகொண்டேன் -திருமாலொடு நான்முகனும்
தேடித்தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்."

   -நான்காம் திருமுறை

"என்னிலாரும் எனக்கினி யாரில்லை
என்னிலும் இனியான் ஒருவன்னுளன்
என்னுளே உயிர்ப்பாய்ப்புறம் போந்துபுக்கு
என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே."

   -ஐந்தாம் திருமுறை.

எக்கோலத்தில் இறைவன் வருவான் ? :

போக்கும், வரவும் புணர்வும் இல்லா புண்ணியனாம் நம் பரமன், அடியவரின் அன்பின் வயப்பட்டு, அவர் எண்ணிய வடிவில் வந்து நின்றும், வாட்டம் தீர்ப்பர்.

"நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த
தெக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே ஆம்."
                              
   -அற்புதத் திருவந்தாதி

“ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
    அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
    உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
    காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.”

   - ஆறாம்திருமுறை

ஒருவர் தமர் எனும் செருக்கு :

விண்ணாளுந் தேவர்க்கும் மேலாய வேதியனாய், மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்ற மாதேவனாம். நம் சிவபரம்பொருளைப் பணிகின்றோம் என்ற செருக்கு (இருமாப்பு) மட்டுமே அடியாரிடம் நிறைந்திருக்கும். பரம்பொருளைத் தவிர யாரையும் பணியமாட்டார்கள் அரனாடியார்கள்.

"பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு ."

   -அற்புதத் திருவந்தாதி

"இடுக்கண்பட் டிருப்பினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்"

   - நான்காம் திருமுறை

“இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு
இறுமாந் திருப்பன்கொலோ .”

  - நான்காம் திருமுறை

திருத்தொண்டே சிறந்தது ! :

தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதாம். அகில காரணர் தாள் பணிவாரே, அகில லோகமும் ஆள்வதற்குரியர். துன்புறுவார் அல்லர் தொண்டு செய்வாரே. அவ்வண்ணம் இறைவனைக் கண்டு பணிந்துப் போற்றி கைவினை செய்து வழிபடுகின்ற பேறு கிட்டினால் போதும். அண்டங்களை ஆளும் வாய்ப்பு அமைந்தாலும் மறுத்து விடுவேன் என்று இரண்டு பெருமக்களும் இறைவனை இறைஞ்சுகின்றனர்.

"கண்டு எந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அது வேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய், மிக்குலகம் ஏழினுக்குங்
கண்ணாளா, ஈதென் கருத்து."

    -அற்புதக் திருவந்தாதி.

"அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு வீற்றிருக்கும் கருத்தொன்றிலோம்
வண்டு சேர் மயிலாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே."

   - ஐந்தாம் திருமுறை

"நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே."

   - ஐந்தாம் திருமுறை

Comments

Popular posts from this blog

காரைக்காலம்மை கட்டுரை 1 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

கசிந்துள்ளுருகும் நலம் - தாமரைக்கண்ணன்