அருட் பித்தனின் துதி வாசகம் 2 - இளம்பரிதி

 தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!

வேதங்கள் துதித்த தெய்வத்தை, பொதுமக்களின் மொழிதனில் போற்றி பாடின பக்தி செய்யுள்கள். உலகில் உள்ள பக்தி இலக்கியங்களில் தெய்வத்தை அத்தனை மனித தன்மை பொருந்திய ரூபமாய் மாற்றி, பாவிகளும் தீண்டி அனைத்துக் கொள்ளும் அளவுக்கு அருகில் அமரச் செய்ததில் விவிலியத்திற்கு அதிக பங்குண்டு, தேவன் உன் அருகிலே தான் இருக்கிறார் என்பதை உணர்த்தி சொல்லிய பக்தி செய்யுள் அது. 

பழைய ஏற்பாட்டில் தாவீதின் சங்கீதம் என்ற பகுதி மிகுதியான புகழ் பெற்றது, திருவாசகத்தின் போற்றி திருவகவல் பகுதியின் அருகில் வைத்து ஒப்புநோக்கு வதற்கு ஏற்ற பகுதி அது. பழைய ஏற்பாட்டில் வரும் தாவீது இயற்றிய சங்கீதம் கிறிஸ்துவுக்கு ஆயிரம் வருடம் முந்தியது, மாணிக்கவாசகரின் திருவாசகம் காலகட்டம் பொதுயுகம் 900 ஆம் ஆண்டுக்கு உட்பட்டது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளில் ஒற்றை கடவுளை துதிக்கும் பாடல்கள் கிருஸ்துவத்தில் இருந்து சைவ சமயம் வரை எப்படி எல்லாம் மாற்றம் அடைந்துள்ளது என்பதை தொகுத்து பார்க்க வேண்டும் என்பதே என் நோக்கம். ( எந்த சமயம் மூத்தது, எது உயர்ந்தது என்றெல்லாம் பாகுபாடு செய்து பார்ப்பது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல)     

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ள "சங்கீத புத்தகம்" ( Book of Pslams) 150 கடவுள் வாழ்த்து பாடல்களை கொண்டுள்ளது, இப்பாடல்கள் மனிதனுக்கும் இறைவனுக்குமான பந்தத்தையும், பக்தியின் ஆழ் உணர்வுகளையும் விரிவாக முன்வைக்கிறது, அதன்வழி கடவுளின் மூலத்தை அறிய முற்படுகிறது. 

சங்கீத புத்தகத்தில் உள்ள கவித்துவமான வரிகளின் அழகியலை நவீன கவிதையின் அழகியலோடு தொடர்பு படுத்தலாம், செய்யுளில் இணைகருத்துக்களின் பிரயோகம், ஒரே பொருள் கொண்ட இரண்டு வரிகள் தொடர்ந்து வருவது, உதாரணமாக "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார் " (சங்கீதம் 23:1-2)  

இதே போல் முதல் வரியில் கூறப்பட்டுள்ள கருத்தை இரண்டாம் வரியில் விவரித்து கூறுதலும் சங்கீத பாடல்களில் நிகழ்கிறது , "கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது மாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறது மாயிருக்கிறது" (சங்கீதம் 19:7)

ஹீப்ரு கவிதைகளில் பல இடங்களில் இரண்டாவது வரி முதல் வரியுடன் முரண்படுவதும் வழக்கம், சங்கீத பாடலில் அத்தகைய வரிகள் உள்ளன, முரண்படுதல் மூலம் கருத்து நிராகரிப்பு நிகழவில்லை மாறாக இரண்டு கருத்துக்களின் வித்யாசம் எடுத்து கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக பின்வரும் வாசகத்தை சொல்லலாம் "சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது." (சங்கீதம் 34:10) 

சங்கீத புத்தகத்தில் உள்ள துதி பாடல்களின் அமைப்பை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலாம், கடவுளின் மகத்துவம், அவரின் படைப்பு மேதமை, அவர் அளிக்கும் விடுதலை ஆகியவற்றை கொண்டாடும் பாடல்கள் உள்ளன. மனித துயரத்தை வெளிப்படுத்தி, அல்லல்படும் சமயத்தில் கடவுளின் உதவிக்காக மன்றாடும் கருத்துக்கள் கொண்ட பாடல்கள் உள்ளன, தகுந்த சமயத்தில் கடவுள் அளிக்கும் உதவியை எண்ணி நன்றி பாடும் கீதங்கள் உள்ளன, இறைவனுடன் உடன்பட்டு, அவரின் ராஜ்யத்தில் ஆட்சி புரியும் மன்னனை போற்றி பாடும் துதிகள் உள்ளன, தீமைகளிலிருந்து விலகி சாதுரியமாக இறைவனின் வழி நடப்பதர்க்கான வழிகாட்டல் கொண்ட பாடல்கள் உள்ளன, அநீதிக்கு எதிராக தெய்வீக தலையீட்டுக்கு அழைப்பு குரல்களை வெளிப்படுத்தும் பாடல்கள் உள்ளன, இஸ்ரவேலருடன் கடவுளின் கொண்டுள்ள வரலாற்று தொடர்பை விவரிக்கும் பாடல்களும் உள்ளன. 

சங்கீத துதிகளின் சாராம்சம் அது எழுதப்பட்ட காலத்தின் அரசியல் நிலைப்பாட்டையும் சார்ந்து இருக்கிறது, மன்னனே தெய்வம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவான ஒற்றை தெய்வ வழிபாட்டு மரபின் அடிப்படையில் கடவுளின் இறையாண்மை மற்றும் மாட்சிமையை அதிகம் வலியுறுத்துகின்றது.  உதாரணத்துக்கு சங்கீதத்தின் முதல் துதி இவ்வாறு உள்ளது " துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். துன்மார்க்கரோ அப்படியிராமல் காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும். " 

மாட்சிமை பொருந்திய அரசனை நிலத்தின் பாதுகாவலனாகவும், குடிகளின் நண்பனாகவும் அதே நேரத்தில் இறைவனுக்கு சமானமானவனாகவும் இந்த துதிப்பாடல்கள் மாற்றுகின்றன. கர்த்தர் என்று பயன்படுத்தப்படும் சொல், இன்று ஏசு கிறிஸ்துவை குறிக்க பயன்படுவது போல், அன்று சங்கீத பாடல்களில் கிறிஸ்துவுக்கு முன்னர் இருந்த யூத கடவுளர்களை குறிப்பிடுவதற்காக பயன்படுத்தபட்டது. 

தாவீது இயற்றிய ஒரு சங்கீதம் இவ்வாறாக துவங்குகிறது "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி" பக்தர் ஒருவர் உருவமற்ற இறை சொரூபத்தை வேண்டி துதிக்கிறான், அவன் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு மன்றாடுகிறான், இறைவனின் விஸ்தாரத்தை விளக்கி கூறுவதற்கு "பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள் மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்" என்ற உவமைகள் பயன்படுத்த படுகின்றன. (சங்கீதம் 103:11-12) 

பழைய ஏற்பாட்டில் சங்கீதத்தை இயற்றிய தாவீது பெத்லஹெம் நகரில் ஒரு மேய்ப்பர் குடியில் பிறக்கிறான், சாமுவேல் என்ற இறைத்தூதர் தாவீது இஸ்ரவேலின் வருங்கால ராஜாவாக முடிசூட்டப்படுவான் என ஆரூடம் கணிக்கிறார். தனது இளம் பருவத்தில் தாவீது மாபெரும் பெலிஸ்திய வீரரான கோலியாத்தை ஒரு கவணையும் கல்லையும் கொண்டு தோற்கடித்து, கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்காக பிரபலமானார். சவுல் மன்னரின் சேவையில் ஒரு இசைக்கலைஞராகவும், பின்னர் ஒரு போர் வீரராகவும் தாவீது நுழைந்தார். சவுல் மன்னர் பொறாமை கொள்ளும் அளவிற்கு தாவீதின் புகழ் வளர்ந்தது, தாவீது சவுலிடமிருந்து தப்பியோடி, தனது விசுவாசிகளின் குழுவை  ஒன்று திரட்டுகிறார். சவுல் மன்னனின் இறப்பிற்கு பின்னர் தாவீது யூதாவின் பூர்வகுடிக்கு ராஜாவாக முடிசூட்டப்பட்டார். பின்னர் டேவிட் அனைத்து பழங்குடியினரையும் ஒன்றிணைத்து இஸ்ரேலின் ராஜாவானார், ஜெருசலேமை தலைநகராக நிறுவினார். தாவீது இஸ்ரவேலின் எல்லையை விரிவுபடுத்தி அதன் எல்லைகளை பாதுகாத்து, மதச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். 

பத்சேபா உடனான முறைதவறிய உறவினாலும், அவளது கணவர் உரியாவின் கொலையாளும் தாவீது அறம் பிழைத்தவனாகிறான், அவனின் தார்மீக தோல்விகளுக்கு அவனின் தீவினைகள் இட்டு செல்கின்றன. தீர்க்கதரிசி நாதன் தாவீதை எதிர்கொண்டார், இது தாவீதின் மனந்திரும்புதலுக்கு வழிவகுத்தது. தன் தவறுக்கு மனம் வருந்தி இறைவனிடம் மன்றாடி சங்கீதம் பாடுகிறான் தாவீது அவனின் அத்தனை பாவங்களும் மன்னிக்கப் படுகின்றன. கடவுள் அவனுடன் ஒரு உடன்படிக்கை மேற்கொள்கிறார், தாவீதின் சந்ததியினர் இஸ்ரவேலை என்றென்றும் ஆட்சி செய்வார்கள் என்று உறுதியளித்தார். அதன் படி தாவீதின் மகன் சாலமோன் இஸ்ரவேலின் அரசனாகிறான். 

பழைய ஏற்பாட்டில் அரசனாக இருந்த தாவீது, புதிய ஏற்படின் கிறிஸ்துவுக்கு நிகரானவன். புதிய ஏற்பாட்டின் படி இயேசு கிறிஸ்துவே கூட தாவீதின் பிள்ளை தான்.  இங்கே நாம் கவனிக்க வேண்டியது பின்னாளில் கடவுளாகப் போகிறவர்கள் மனிதர்களாகவே இருந்திருக்கிறார்கள், மனிதர்கள் செய்யும் தவறுகளை அவர்களும் செய்கிறார்கள்.  தவறே இழைக்காத, மக்களுக்காக மட்டுமே வாழப்போகும் ஒரு அரசனின் வருகைக்காக தாவீதின் தோற்றமும், வினையும் இயங்குகின்றன. 

சங்கீத பாடல்களின் அழகே அதன் எளிமையும், நேரடி பொருள்கொள்ளும் தன்மைதான். மனிதன் செய்ய கூடுபவை , செய்யக்கூடாதவை என்ற விதிகளை வகுத்துக்கூறும் விவிலியத்தின் நீதி நூல் வடிவமும் அது இத்தனை ஆண்டுகள் நிலைத்திருப்பதற்கு ஓர் கரணம். நீதி நூல் தன்மை கொண்டிருந்தாலும் அது பொதுமறை ஆகவில்லை, அது சமய நூலக நிற்பதற்கு அது எடுத்துக்கொண்ட மக்கள் பரப்பு, அந்த நிலப்பகுதியின் விழுமியம் ஆகியவற்றை முன்னிறுத்தியதே காரணம். 

ருக்கமாக பார்த்தல் சங்கீத பாடல்கள் இறைவனை படைப்பவனாகவும், மேய்ப்பாளனாகவும், அரசனாகவும், பாதுகாவலனாகவும், நீதிமானாகவும் குறிப்பிடுகிறது. சங்கீத பாடல்களில் கிறிஸ்தவ மெய்யியல் கருத்துக்கள் அதிகம் பேசப்படவில்லை, பழைய ஏற்பாட்டின் காலகட்டத்தில் கிறிஸ்தவம் சார்ந்த ஆன்மீக தத்துவம் உருவாகி இருந்திருக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.  

ஆயிரம் வருடங்களில் இறைவன் என்ற கருத்துரு எவ்வாறெல்லாம் மாற்றம் கண்டுள்ளது என்பதை பழைய ஏற்பாட்டின் காலகட்டத்திலிருந்து நகர்ந்து திருவாசக காலகட்டத்தை உற்று நோக்கினால் புலப்படும்.  திருவாசக தொகுப்பில் சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் வரை மொத்தம் ஐம்பத்தி ஓரு பகுதிகள் உள்ளன. அதில் நான்காவது பகுதி போற்றி திருவகவல். 

திருவாசகம் சிவபுராணத்தில் இருந்து துவங்குகிறது ஈசனின் தொன்மையை விளக்கி பாடியபின், இரண்டாம் பதிகமான கீர்த்தி திருவகவலில் ஈசனின் திருவருளை புகழ்ந்து பாடுகிறது. 

மூன்றாம் பகுதியான திருவண்டப்பகுதி 

"படைப்பாற் படைக்கும் பழையோன், படைத்தவை

காப்போற் காக்கும் கடவுள், காப்பவை

கரப்போன் கரப்பவை கருதாக்

கருத்துடைக் கடவுள்" என இறைவனை விவரித்து, பின்னர் அண்டமும் ஈசனும் ஒன்றென விதந்தோதுகின்றது.

இவ்வளவும் பாடிய பின்னர் நான்காம் பதிகமான போற்றி திருவகவல் உலகில் உயிர்கள் உடம்புடன் பொருந்தித் தோன்றும் உலக உற்பத்தியைக் விளக்கி கூறுகிறது, தோற்ற பொருளான பரம்பொருளை போற்றி பாடுதலும், மானுடர் அவனுக்கு செலுத்த வேண்டிய வணக்கத்தையும் வலியுறுத்துகிறது போற்றி திருவகவல். 

மாணிக்கவாசகர் மதுரை பாண்டிய ராஜ்யத்தில் திருவாதவூரில் பிறக்கிறார், அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருக்கிறார்.  பாண்டியனுக்காக குதிரைகள் வாங்க நாகப்பட்டினத் துறைமுகத்துக்கு சென்று, செல்லும் வழியில் திருப்பெருந்துறையில் சிவனால் ஆட்கொள்ளப்பட்டார். வந்த வேலையை மறந்து, கொண்டு வந்த பணத்தை சிவனுக்குக் கோயில் கட்டும் பணியில் செலவிட்டு மன்னனால் பல தொல்லைகளை அடைகிறார், இறுதியில் மன்னன் இவரது சிறப்பை உணர்ந்து வணங்கினான் என்பது அவரது வாழ்க்கை குறிப்பு. அரசவை பதவிகள் வகித்தாலும் அரசனை பற்றியோ, அவனுக்கான நல்லாட்சியின் நெறிமுறைகள் பற்றியோ, நீதி போதனை பாடல்களை மாணிக்கவாசகர் இயற்றவில்லை, அவர் அறிந்ததெல்லாம் ஈசன் நாமம் மட்டுமே அவனை எண்ணி அவனை உணர்ந்து மட்டுமே பாடுகிறார். துவைத நிலைக்கு அவரிடம் இடமே இல்லை, எதையும் அவர் இறைவனை துதித்து வேண்டிப்பெறவும் இல்லை.  

அன்றைய காலத்தின் மக்களின் இயல்பான நாட்டுப்புற பாடலின் மொழி அமைப்பில் திருவாசகம் இயற்றப்பட்டுள்ளது, முக்கியமாக பெண்கள் பாடும் பாடல்களின் அமைப்பு திருவாசகத்தில் உள்ளது. பெண்கள் உட்கார்ந்து காய்களை தூக்கி போட்டு கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு அம்மானை, அப்போது அவர்கள் பாடும் பாடலின் அமைப்பிலேயே திருவம்மானை பாடப்பட்டுள்ளது. பெண்கள் வாசனைப்பொடி இடித்தபடி பாடுவது பொற்சுண்ணம், அந்த அமைப்பில் மாணிக்கவாசகர் இயற்றியது திருப்பொற்சுண்ணம். பெண்கள் பூ பறிக்கும் போது பாடும் பாட்டை போல் திருப்பூவல்லி பகுதி இயற்றப்பட்டுள்ளது, பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடும் போது பாடும் பாடல் வடிவில் திருப்பொன்னூஞ்சல் பகுதி இயற்றப்பட்டுள்ளது. இப்படி பெண் பாடல்களின் அடிப்படையில் திருவாசகம் அமைந்துள்ளதால்  அந்த நூலுக்கு நளினம் கூடியுள்ளது. திருவாசகம் காதல் காவியம் என்று என்னும் அளவிற்கு, தலைவனை புகழ்ந்து பாடும் தலைவியின் கசிந்துருகும் கூற்று மிகுந்துள்ளது. 

போற்றி திருவகவல் திருமாலின் புகழ்களை சொல்லி, தேவர்கள் போற்றும் உயர்வுடைய திருமாலே இறைவனது திருவடியை காண பன்றி வடிவு எடுத்து தேடியும் காண்கிலர் என வியக்கும் ஈசனை பற்றிய அறிமுகத்துடன் துவங்குகிறது. அடுத்த பாடல்களில் உயிர்களின் பிறவித்துன்பம் யாதென்று கூறப்படுகிறது, யானை முதல் எறும்பு வரை பல பிறவிகளின் துன்பத்தை கூறியபின், மானுடப் பிறவியில் பத்தாம் மாதத்தில் தாய் படும் துன்பத்தை, "துக்க சாகரம்" என்றும், குழவி படும் துன்பத்தை, "துயர்" என்றும் பிரித்துக் கூறப்படுகிறது. அடுத்துக் காமத்தால் வரும்  நோய் பற்றி கூறப்படுகிறது , ஏன் கடவுள் துதிப்பாடலில் மானுடனின் எல்லா பருவ துயரும், பிணியும் குறிப்பிடப்பட வேண்டும் ? 

"பற்றி அழைத்துப் பதறினர் பெருக" என உலகப்பற்றை கூறும் மாணிக்கவாசகர், துயர் நிலைகளை கடந்து, தடையாக நிற்கும் உறவுகளை கடந்து, மாய தத்துவங்களைக் கடந்து ஒன்றே அவன் என அவனை பணியும் வழிமுறையை எடுத்துரைக்கும் முன் மெய்ந்நாட்டத்தில் கவனம் செலுத்த தடை அளிக்கும் இடையூறுகளைத் தொகுத்துக் கூறுகிறார். 

"தழலது கண்ட மெழுகது போலத், தொழுதுள முருகி அழுதுடல் கம்பித்" அவனைக் கண்டு மெழுகைப் போல உருக வேண்டும் என்கிறார், எதற்காக ?. உலகநெறி எளிமை உடையது, இறை நெறி கடுமையாதலின், சலிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படுதல் கூடாதென "தப்பாமே தாம் பிடித்தது சலியா" என்றார். தெய்வம் என்பது ஒரு சித்தத்தை என்பதை மிகத்தெளிவாக தம் பாடலில் முன்வைக்கிறார்.

கன்றை ஈன்றெடுத்த பசு அதனைக் காணாதபோது கதறுவதை போல, அவன் திருவடியை காணவேண்டியே இறைபணி நிற்போர் கதற வேண்டும்  "கற்றா மனமெனக் கதறி" என்கிறார். 

என்ன சொல்லி கதறுவேன் என் பராபரமே ? என சாதகன் கேட்பான் என்பதால் போற்றி சொல்லி கதற சொல்கிறார். போற்றியை எங்கிருந்து ஆரம்பிக்கிறார் என்றால் , நம்மை தொடர்ந்து வரும் சஞ்சிதம் என்னும் பூர்வஜென்ம தொகை வினையையும், எதிர்காலத்தில் நம்மை தாக்கும் ஆகாமியம் என்னும் எதிர்வினையும் அழித்தொழிக்க வல்ல வேதியனை துதிக்க சொல்கிறார். 

பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ அவ்வளவு பெரிய கிருபை கொண்டவர் கர்த்தர் என விவிலியம் விலகுவதை போல், விண்ணுலக தேவர்கள் அடைவதற்கு தவம் செய்யப்படவேண்டிய இறைவன், மண்ணுலகில் வாழும் அடியாரிடத்தில் விரும்பித் தங்கியிருக்கிறான் என்ற சிறப்பை குறிக்கும் விதம் "வானோர்க் கரிய மருந்தே போற்றி, ஏனோர்க் கெளிய இறைவா போற்றி" என துதிக்கிறார். அதே நேரத்தில் இறைவனை தோழன் எனவும், துணைவன் எனவும், வாழ்வெனவும், அத்தனை செல்வமும் அவன் தான் என்றும் போற்றி பாடுகிறார். 

அறிவில் இரண்டு வகையான அறிவுகள் உள்ளது என சைவம் விளக்குகிறது,  ஒன்று பாச ஞானம் அல்லது உலக அறிவு : இது கல்வி கேள்வி உலக வழக்கம் பழக்கம் அனுபவம் ஆகியவற்றால் உண்டாகும் அறிவு, பசு ஞானம் அல்லது உயிர் அறிவு : இது ஆத்மாவுக்கு அடிப்படையில் உள்ள உள்ள அறிவு. விழிப்பு நிலையில் நான்கு நிலைகள் உள்ளன சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் என்பன அவை. இதில் நான்காவது விழிப்பு நிலையும் கடந்த உயர்ந்த நிலையில் மட்டுமே வியாபிக்க கூடிய சுடர் உருவானவன் அவன், பசுஞானம் பாச ஞானங்களால் அறிய முடியாதவன், இறை அறிவினால் மட்டுமே அறியக்கூடிய தெளிவே அவன் அவனின் நிலையை விவரிக்கிறார் தெய்வப்புலவர். 

வணக்கத்துக்குரிய இறைவன் யார் என்பதை விளக்க மாணிக்கவாசகர் கையாளும் உவமைகளும், உருவங்களும் அதி உன்னதமானவை. உதாரணமாக துளையிடப்பட்ட முத்தினும் துளையிடப்படாத முத்தே விலைமதிப்பும் வீசு ஒளியும் மிகுதியாக உடையது அதனால், இறைவனை "தோளா முத்தச் சுடரே" என்ற உவமை கொண்டு அழைக்கிறார்.  "ஆர் உருவ விகிர்தன்" நாம் அறிந்த வண்ணமயமான வஸ்துக்களில் இருந்து வேறுபாடானவன், கல்லாகிய நெஞ்சில் நாராகிய அன்பை வெளிப்படுத்தியவன், என பலவாறாக விவரித்துக் கொண்டே செல்கிறார். 

சிவ தத்துவத்தை தாண்டி, சொற் சுவைக்காகவே திருவாசகத்தை வாசிக்க இயலும், குறிப்பாக தேசப் பளிங்கின் திரள், நதிசேர் செஞ்சடை நம்பா (நம்பன் - எவ்வுயிரும் விரும்புதற்குரியோன்), மூவேழ் சுற்றம், அழிவிலா ஆனந்த வாரி, அளிபவர் உள்ளத்து அமுதே, இருள் கெட அருளும் இறைவா என தேன் தமிழ் சொற்கள் நீண்டுகொண்டே போகிறது. 

திருவாசகத்தின் சிறப்பு அது உருவத்தை பாடுகிறது, அருவத்தை பாடுகிறது, உருவம் அருவம் ஆவதும், அருவம் உருவம் ஆவதும், பின்னர் எதுவும் இல்லாமல் ஆவதும் திருவாசகத்தில் பாடப்படுகிறது. இறைவனை மனிதருடன் தொடர்பு படுத்திக் கொள்ள அவனுக்கு உறவு நிலைகள் வழங்கப்படுகின்றன அவன் தலைவன், முதல்வன்,அரசன், அத்தன், காதலன், கள்வன், சுடர், சுவை என உணர்வுகளின் ஊடே அவன் திருவாசக நூல் முழுவதும் நிரம்பியிருக்கிறான். 

ஒருவகையில் அறிய முடியாததை விளக்கி பார்க்க முயன்று அது எதுவாக இருக்க கூடும் என மாணிக்கவாசகர் எழுதி எழுதி தன் கருத்தில் தானே திருப்தி கொள்ளாமல் மேலும் மேலும் சொல் கொண்டு ஆராய்ந்து கொண்டே போகிறார். மாலும், அயனும் தேடி பெறாத அடிமுடி காண அண்ணலை சொற்களால் கவிஞன் கண்டுவிட்டான், சிறுவனின் தூண்டில் முள்ளில் திமிங்கலம் அகப்பட்டுக்கொண்டதை போல். கண்டுவிட்ட பரவசத்தை அவனால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை, மீண்டும் சொல் விளையாட்டு தொடர்கிறது. 

விவிலியத்தில் இறைவன் பூமியை படைக்கிறார், அவர் தன் ராஜ்ஜியத்தில் வசிக்கிறார், பூலோக மக்களுக்கு வழிகாட்டும் அரசாட்சி ஒன்றை பூமியில் நிலைபெற செய்கிறார், மீட்பாளன் ஒருவனின் வருகையை உறுதி செய்கிறார். விவிலிய கருத்திலிருந்து விலகி வேறு ஒரு தலத்தில் சைவ மரபின் இறைவன் இருக்கிறான் , இங்கு அவனே அரசன், அனைத்துலகத்தையும் ஆட்சி செய்பவன், அவனே தூதுவனாகவும் வருபவன், அவனே தன்னை பற்றி பாடலும் இயற்றுபவன், அவன் வசிப்பிடம் சிவலோகம், தேவர்களை விடவும் அடியவரிடம் அதிகம் அன்பு பொருந்தியவன். அவன் பசுக்களை நல்வழி படுத்தும் வழிகாட்டியல்ல, நன்மை தீமை என்ற இரு நிலைக்கு அப்பாற்பட்டவன். மனிதனின் எந்த அம்சமும் அற்றவன், மொத்தத்தில் அவன் வேண்டி பெற வேண்டிய ஓர் உயர்நிலை. சைவ மரபின் படி சிவலோக பதவியை ஒருவன் அடைய இயலும், முக்தி பெறுதல் இயலும், சிவனுடன் கலத்தலும் இயலும். 

"கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்". என சொல்லும் சங்கீதமும், "மன்னிய திருவருள் மலையே, போற்றி! என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல் சென்னியில் வைத்த சேவக, போற்றி!  என்னும் திருவாசகமும் முன்வைக்கும் பக்தியும் ஒன்றென படுகிறது. தாவீதின் பக்திக்கும், மாணிக்கவாசகரின் பக்திக்கும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. எத்தனை வருட இடைவெளி இருந்தாலும் இறைசேவகனின் துதிபக்தி என்றுமே மாறாது என இந்த இரண்டு நூல்களும் சான்றளிக்கின்றன. 

சிறைபெறா சிவரூபம் அழுது அடியடைந்த அன்பரின் சொற்களுக்குள் குடிகொண்டு விட்டது; தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி.

Comments

Popular posts from this blog

காரைக்காலம்மை கட்டுரை 1 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

கசிந்துள்ளுருகும் நலம் - தாமரைக்கண்ணன்

பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு