அருட் பித்தனின் துதி வாசகம் 1 - இளம்பரிதி

 கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் எடக்கல் குகையில் உள்ள பாறை செதுக்கு ஓவியங்கள் கி.மு 6000 வருடத்தை சேர்ந்தவை. அதில் தலையில் கிரீடம் சூடிய ஒரு மனிதனை சுற்றி பிற மனிதர்கள் அமர்ந்திருக்கின்றனர் அந்த குழுவின் தலைவனாகவோ, தலைமை பூசகனாகவோ அவன் இருக்க கூடும், அன்று தொட்டு தலைவன் வழிபாடு நம் மரபில் உள்ளது. ஒரு தலைவன் என்பவன் யார், அவனின் அம்சங்கள் என்ன, அவனின் பராக்கிரமங்கள் என்ன, அவன் எனக்கு அளிப்பது என்ன என ஒரு கதையாடலாகவே அவனை பற்றிய துதிகள் விளங்குகின்றன. அன்று தொட்டு இன்று வரை ஒருவர் பற்றிய துதிகளே அவரை பற்றிய வாய்மொழி வரலாறாக நிலைக்கிறது.

கர்ணனின் கொடை , தருமரின் அறம், பீமனின் வலிமை, அர்ஜுனனின் வீரம் இவை எல்லாமே அவர்களை பற்றிய வாய்மொழி துதிப்பாடல்கள் மூலமே நம்மிடம் நிலைத்துள்ளது.

"என்லிலுக்கு கீதம்" (Hymn to Enlil) என்ற துதிப்பாடல் சுமேரிய நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்டது. கி.மு 2100 ஆம் ஆண்டை சேர்ந்த அந்த பாடல், காற்று மற்றும் பூமிக்குரிய சுமேரியக் கடவுளைப் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது, வரலாற்றில் பதிவாகி உள்ள பழமையான துதிப்பாடல் இதுவாக கூட இருக்கலாம். ஒற்றை கடவுளுக்கு பாடப்பட்ட துதியாக ஏட்டனுக்கு துதி (hymn to aten) என்ற எகிப்திய பாடல் சூரிய கடவுளை நோக்கி படபட்டுள்ளது. இதே போன்று சிந்து நதி நாகரிகத்தில் இயற்கையின் அம்சங்களுக்கும், அவற்றின் அதிபதிகளான வேத கால கடவுளுக்கும் துதி பாடல் உருவாகியது. அதனை தொடர்ந்து கிறிஸ்து, இஸ்லாமிய தெய்வத்தை நோக்கிய துதிபாடலும் உருவாகி வந்தன.

தெய்வத்தை பற்றிய துதிபாடலால்களில், அந்த தெய்வத்தை பற்றிய பாராட்டு, அந்த தெய்வத்திற்கு நன்றி செலுத்தும் தோரணை, அந்த தெய்வத்தின் முன் வைக்கப்படும் பிரார்த்தனை, அதற்கான வசனங்கள், அந்த தெய்வத்தை வழிபடும் முறை ஆகியவை பெரிதும் இடம்பெறும். பொதுவாக துதி பாடலின் வடிவம் எவ்வாறாக அமையப்பெருமெனில் ஒவ்வொரு சரணமும் (அல்லது வசனம்) ஒரே அளவீட்டு திட்டத்தைக் கொண்டிருக்கும். திரும்பத் திரும்ப வரும் சொல் அமைப்பு பாடல்களை மனப்பாடம் செய்து பாடுவதை எளிதாக்கும்.

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அசைகள் அல்லது அழுத்தங்கள் கொண்ட சொற்கள் இருக்கும், பாடலில் பயன்படுத்தப்படும் சொற்கள் ஆழமான படிமத்தையும், குறியீட்டையும் கொண்டிருக்கும். பெரும்பாலான துதி பாடல்கள் ஒளி, இயற்கையின் ஆற்றல், மதம் சார்ந்த உருவகங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தும் சொற்களை கொண்டு இயற்றப் பெற்றிருக்கும்.

துதி பாடல்களின் முக்கியமான அம்சம் என்னவென்றால் அதன் துவக்கம் நேரடியாக இறைவனை நோக்கி பாடப்படும், அவனிடம் உரையாடுவதை போன்ற அம்சம் நிரம்ப பெற்றிருக்கும், இதனாலே அந்த தெய்வத்தின் மீது நம் கவனம் அதிகம் குவியும். அந்த தெய்வம் யார், அவன் மீது கொண்டுள்ள பற்று எத்தகையது , அந்த தலைவனை சரணாகதி அன்பு கொண்ட நான் அடையவேண்டிய நோக்கம் என்ன என்ற கூற்றுகளை விரிவாகவும், கவிநயமும், ஆன்மீக தரிசனமும் குன்றாத வகையில் இயற்றப்படுவது பக்தி இலக்கியம் என கருதப்படுகிறது.

தமிழின் மூத்த நூலான தொல்காப்பியம் திணைகளையும் அதில் உரையும் தெய்வங்களையும் வரையறுத்து குறிப்பிடுகின்றது, அங்கிருந்தே தமிழ் இலக்கியத்தில் குடித்தலைவன் தெய்வமாவதும், அவன் மீதுள்ள பக்தியும், அவனை மகிழ்விக்கும் முறையும் பதிவாக தொடங்கியது. பக்தி இலக்கியத்திற்கு பல சாரமும், அதை புரிந்துணர்த்துக்கொள்ள பல நெறிமுறைகள் இருந்தாலும் இனிமையான உணவை கொடுத்து சங்கத்தமிழை இறைவனிடம் வரமாக கேட்கும் பாடல்களே பக்தி இலக்கியம் என நம்மில் பலர் கருதுகிறோம்.

பூரண அன்பென்பது பக்தியின் நிமித்தம். பக்தி இலக்கியம் கண்ணுக்கு எட்டா  கனியை, நாவிற்கு எட்டா சுவையை , பராபரத்தை சொற்கள் கொண்டு வரையறுக்க முயலுகிறது. எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லி முடித்த பின்னும் ஏதோ ஒன்று அறியமுடியாமல் எஞ்சி இருக்கிறது அதை தேடி செல்லும் பாதையை பக்தி செய்யுள்கள் சாதகனுக்கு அளிக்கின்றன.

மெய்யாக உள்ளம் உருக வேண்டி, தன்னிலை மறந்து பூசித்து, நான் என்னும் நிலை கரைந்து, நானும், நான் காதல் கொள்பவனும் அவன்பால் நான் கொண்ட காதலும் ஒன்றே என்னும் நிலையை எட்டியவர்களின் கூற்றே பக்தி செய்யுள் யாவும்.

பக்தி என்பது பண்டமாற்றாக சைவ சமயத்தில் காணப்படவில்லை. பட்டாம்பூச்சி ஒன்றை வத்திப் பெட்டியில் அடைத்து நான் வானத்தை கையில் ஏந்தி இருக்கிறேன் என பேரண்டத்தை சுருக்கி பார்ப்பதல்ல பக்தி இலக்கியம், சிறை பெறா நீர் என பரம்பொருளை விவரித்து சொல்வதே அதன் தொடர் பணி.

மானிட சரீரம் கொண்ட ஒவ்வொருவரும் கர்ம வினைகளை களைத்து, மீண்டும் பிறவாப் பேரின்ப நிலையை எட்டுவதற்கு சைவ சமயம் நான்கு பெரும் வழிகளை நமக்கு முன்வைக்கின்றது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு முறைகளில் இறைவனை அடையலாம் என 'சைவ நாற்பாதங்கள்' போதிக்கின்றது. இந்த நான்கு பெரும் பாதைகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து பதினாறு கிளை வழிகளாக பிரிகின்றது.

இதில் "சரியை" என்பது தாச மார்க்கம், சரியை என்பதை நம் புரிதலுக்கு சேவை என பொருள் கொள்வோம்.  திருத்தொண்டால் ஈசனை அடையும் பாதை இது. கிரியை என்பது சற்புத்திர மார்க்கம் , அனுஷ்டானங்கள் செய்து, குருமார்களின் வழியே தீட்சை பெற்று, தீவிர இறை வழிபாட்டால் ஈசனை அடைவது. யோகம் என்பது சக மார்க்கம், தீவிரமா ஆத்ம தியானத்தால் சமாதி நிலையை எட்டி ஈசனை அடைவது. ஞானம் என்பது சன்மார்க்கம், பிரம்மம் என்பது ஒன்றே அது ஈசன் அன்றி வேறில்லை என தெளியும் நிலையே ஞான மார்க்கம்.

சைவ நால்வர்களின் திருவுருவங்களை எல்லா சிவாலயங்களிலும் நாம் காணலாம், அந்த சிலைகளின் உட்பொருள் என்பது ஒவ்வொரு பக்தி நெறியை பின்பற்றி முக்தி பெற்ற முன்னோடிகளை நாம் என்றும் நினைவில் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதே. நால்வரும் அவரவர் எடுத்த பக்தி நெறியை தீவிரமாக முன் நிறுத்தி பாக்கள் இயற்றினார், நால்வரும் வெவ்வேறு எரிபொருள் கொண்டு ஒரே மகா சோதியை ஏற்றினர்.

தாசமர்க்கத்தின் மூத்தோன் சரியை வழி முக்தி பெற்ற திருநாவுக்கரசர், உமாநங்கையின் முலைப்பால் உண்ட ஞானசம்பந்தர் சற்புத்திர மார்க்கதின் முன்னோடி. எம்பெருமானின் அணுக்க சீடனாக இருந்து ஈசனோடு தவத்தால் கலந்த சுந்தரமூர்த்தி நாயனார் சக மார்க்கர். எந்தையே ஈசா என திருப்பெருந்துறையில் ஈசனே குருவாக வந்து உபதேசித்த ஞான மார்க்கத்தின் ரத்தினமாக திகழ்பவர் சன்மார்க்க பாவலன் மாணிக்கவாசகர்.  

இந்த நான்கு மேதைகளும் சுவை குன்றாத சொற்கள் கொண்டு பாமாலைகள் தொடுத்து சைவத்தின் மைய தெய்வமான சிவனை பூசனை செய்துள்ளனர், தமிழ் அன்னையின் மணிமுடியில் மின்னும் வைரமாக ஒவ்வொரு மரபுக்கவியின் பாடலும் அமைந்துள்ளது.

நால்வருமே குன்றாத பக்தியின் தூய நெறி நடந்த ஞானியர். நால்வரில் எந்த திசை பிடித்து நடந்தாலும், அவரின் ஏதோ ஒரு பக்தி செயுள்ளை  வாசித்தாலும், ஞானியர் அடைந்த அதே பூரிப்பையும் பரவசத்தையும் வாசிப்போரும் அடையக்கூடும், சாதகரின் பேரின்பம் முழுதும் கிடைக்கும். நால்வரில் என் தேனார் அமுதன் மாணிக்கவாசகனே.

பக்தி என்பது ஓர் அனுபவம், பனையின் மீதேறி, பனங்காய் குலை இறக்கி அதன் தலைசீவி, நுங்கை நோண்டி தின்று பொட்டலில் தலைமேல் காயும் சூரியனை கண்டு புன்னகைப்பதை போன்ற அனுபவம் பக்தி. அறிய முடியாத பொருளை அறிந்துகொள்ள பல வழியுண்டு. அதன் முதல் படி அறிய முடியாத பொருள் ஒன்று உண்டு என்பதை ஒருவர் ஒப்புக்கொள்வதே.

பதநீரின் சுவைக்கிணையான பெருஞ்சுவையை உலகில் வேறில்லை, சுவைக்கும் ஒவ்வொரு துளிக்கும் சுவை கூடிக்கொண்டே போகும், குறைவில்லா நிறைபெறும் சுவையது அதுபோன்றதே எனக்கு திருவாசகம், ஈசனை என் மெய் அன்பனாக்கி தந்த படைப்பு, அதன் ஒவ்வொரு வரியும் ஓர் அனுபவம், ஒரு தனி வாழ்வு.

சொல்லழகும், பொருளழகும் ஒருங்கே அமைந்து வருவது சிறந்த கவிதை. உயர்ந்த சிந்தனையையும், தத்துவத்தையும் சொல் கொண்டு விளக்கும் படைப்பே வேதம். கவிதையும், வேதமும் பிணைந்து, பண்ணிசை வழியே இறைவனை சிந்தையில் நிலைகொள்ள செய்வது திருவாசகத்தின் தனி சிறப்பு. மூவரின் பக்திமார்கத்தையும் பயின்று, பயிற்சித்து, முற்றி அதிலிருந்து மீறி தனக்கான மார்க்கத்தை அமைத்து அந்த சன்மார்க்க கடலில் நம்மையும் மூழ்கி முத்தெடுக்க செய்யும் செய்யுள் இது. அதனாலே சொல் அழகில் திளைக்க விரும்புவோருக்கும், ஆன்ம சாதனையில் ஈடுபட விரும்புவோர்க்கும், அருள்நாட்டம் பெற விரும்புவோர்க்கும் பொதுமறையாக இந்த நூல் விளங்குகிறது.  

இறப்பு வரை ஓர் நெறியில், ஓர் ஒழுக்கத்தை பின்தொடர்பவனை சாதகன் என அழைக்க இயலும். பக்தி செய்யுள்களை இயற்றியவரும், அதன் பயிற்றுனரும், அதை பயில்பவரும் சாதகர்களே. புலன்களுக்கு அகப்படாத ஒன்றை அறிய முடியாமைக்கு அப்பால் விலக்கி வைத்து, சாமானியர்களுக்கு எட்டாத சிகரத்தில் இறை என்னும் முழு நிலையை நிறுத்தி வைத்த தத்துவங்களுக்கும், வேத சாரங்களுக்கும் மாற்றாக சக சாதகர்களுக்காக இயல்பான மொழிநடையில், செம்மொழின் மைந்தர்களால் உருப்பெற்றதே பக்தி இலக்கியம், அதன் மணிமகுடமே திருவாசகம்.

நவீன இலக்கிய வாசகனுக்கு மொழியையும், அதன் பொருளையும், சந்தத்தையும் அதன் இசையையும், சமயத்தையும் அதன் தத்துவத்தையும் திகட்டாத மதுரமாய் அளிப்பது மாணிக்க சொற்களால் தேன் தமிழை அலங்கரிக்கும் திருவாசகமே. மொழியிடம் நாம் யாசகம் நீட்டி நிற்கும் பாத்திரங்களை நிறைக்க திருவாசகத்தின் ஒரு வாசகம் போதும்.

ஒரு பக்தி பாடல் நூலுக்கு இத்தனை துதிபாடல்களா என என்னும் அளவிற்கு போற்றப்பட்டுள்ள நூல் திருவாசகம். திருவாசகம் ஈசன் துதி போற்றி பாடியுள்ள "போற்றி திருவகவல்" பகுதி என்னை ஆட்கொண்ட பகுதி அதை பற்றி விரிவாக எழுதவேண்டும்.

Comments

Popular posts from this blog

காரைக்காலம்மை கட்டுரை 1 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு

கசிந்துள்ளுருகும் நலம் - தாமரைக்கண்ணன்