சைவ சித்தாந்தப் பார்வை 1 - உ முத்துமாணிக்கம்
என்னுடைய நண்பன் ஒரு முறை ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வைத்து அந்த பாட்டிலை இறுக்கி மூடி ஒரு ஓரத்தில் வைத்து விட்டான். மூன்று நாட்கள் கழித்து அந்த பாட்டிலை பார்த்தால் ஒரு சிறு புழு உருவாகி இருந்தது. வேக வேகமாக ஓடி வந்து என்னிடம் எப்படி இந்த புழு இதுக்குள்ள போயிருக்கும்,? இந்த புழுவுக்கு அம்மாவும் அப்பாவும் யாரு,? இந்த புழுவை யார் உருவாக்கினார்? தண்ணீர் தான் இதுக்கு அம்மாவும் அப்பாவும் என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினான்.
இது சாதாரணமாக அன்றாடத்தில் நடக்கும் ஒன்று தான், அறிவியல் இதை சரியாக விளக்க்கி விடுகிறது. ஆனால் ஒரு தத்துவ ஆர்வம் உள்ளவன் இந்த சம்பவத்தை வைத்து நீட்டிக் கொண்டு மேலே செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
பொதுவாக மனித மனம் தர்க்கத்தை நோக்கும். ஸ்தூலமாக இருக்கிற எல்லா விஷயத்தையும் முறையே நம்பும். சூட்சம பொருளாக இருக்கக்கூடிய சில விஷயத்தை நம்ப மறுக்கும் ஏற்றுக்கொள்ள அது எத்தனிக்காது. அறிவியலும் அதற்கு விதிவிலக்கல்ல.
எந்த இடத்தில் இருந்து தத்துவம் பிறக்கிறது என்றால் ஸ்தூலமாக பார்க்கிற விஷயங்களில் இருந்து சூட்சும பொருளையும் உண்மைப் பொருளையும் விளக்கி தெளிவதே தத்துவம்.
தமிழில் அதற்கு மெய்யியல் என்று பெயர். மெய் என்றால் உண்மை. உண்மையை விளக்கிக் காட்டும் இயல் மெய்யியல் என்று அதற்கு அர்த்தம். இந்த மெய் என்ற வார்த்தையை வைத்தே சிறு அழகியலாக தத்துவத்தை விளக்கி விடலாம். ஒரு சின்ன உதாரணம் பாருங்களேன்.
உடம்பிற்கு மெய் என்று பெயர். உடம்பு அழியக்கூடியது. மெய் என்றால் உண்மையானது என்றும் அழியாதது என்றும் அதற்கு பொருள். இந்த உடம்பு அழியக் கூடியது பிறகு ஏன் இதற்கு மெய் என்று பெயர் வைத்தார்கள் என்று கேள்வி எழுகிறது. அந்தக் கேள்வி சிறு அழகியலாக விரிந்து தத்துவமாக மாறுகிறது. ஒரு பெண் வெங்காயம் விற்பனை செய்கிறாள். தலையில் "சும்மாடாக" வெங்காயத்தை வைத்து சுமந்து கொண்டு விற்கிறாள். அவளை நாம் பேர் சொல்லியாக அழைக்கிறோம்? வெங்காயம் இங்க வாங்க என்று தானே அவளை அழைக்கிறோம். அவள் வெங்காயம் என்று சொல்லும் போது எப்படி திரும்பி பார்க்கிறாள்? அவள் பெயர் வெங்காயம் இல்லை, ஆனால் வெங்காயம் என்று சொன்ன உடனே திரும்புகிறாள். காரணம் வெங்காயத்தை தலையில் சுமந்து கொண்டு திரிகிறாள். அதைப்போல இந்த உடம்பு மெய்யை சுமந்து கொண்டு திரிகிறது. மெய் என்ற உண்மையை சுமப்பதனால் அதற்கு மெய் என்று பெயர். இப்படியாக நாம் ஒரு செயலிற்கு கேள்வி கேட்டு அந்து விரிந்து, கேள்விகளின் முடிவில் அது தத்துவமாக மாறுகிறது.
தத்துவம் பலவாறாக விரிந்து கிடக்கிறது அதில் சைவ சித்தாந்தம் ஒரு சிறு கூறு தான். மேலும் தத்துவம் என்பது ஒரு டூல். அந்த டூல் ஐ பயன்படுத்தி உண்மையை தெரிய வேண்டுமே தவிர, தத்துவத்தை பிடித்துக் கொண்டு அதையே பெரிதாக்கி கொண்டோம் என்றால், படகில் தோட்டியை பயன்படுத்தி பின் பயணம் முடிந்துவிட்டு இறங்கும் போது இந்தத் தோட்டி பயன்படுத்தினதே எனவே தோட்டியை தூக்கிக் கொண்டு செல்வது எப்படி சுமையோ அது போல தத்துவத்தை தூக்கி சுமந்து கொண்டு செல்வதும் சுமையாக ஆகிவிடும் இது சைவ சித்தாந்தமே சொல்லும். அருணகிரிநாதர் அதை விரிவாக கந்தர் அனுபூதியில் பேசுவார்.
ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே
சைவ சித்தாந்தத்தில் (6x 6 =36) தத்துவங்கள் இருக்கிறது. அருணகிரிநாதர் அந்த முப்பத்தாறு தத்துவங்களுக்குள்ளே இருக்க வேண்டும் நான் என்று அவர் கேட்கவில்லை இந்த 36 தத்துவங்களையும் தாண்டி அதற்கு மேல் செல்ல வேண்டும், இந்த 36-யும் கடந்து நான் எப்போது மேலே சென்று முக்தி அடைய முடியும் என்று கேட்பார்.
இந்த 36 ஐ மூன்று வகையாக பிரிப்பார்கள். சிவ தத்துவம்
வித்யா தத்துவம்
ஆன்மதத்துவம் என்று.
இதில் சிவ தத்துவத்திற்கு ஐந்து உறுப்புகளும் வித்தியாசத்தகத்திற்கு ஏழு உறுப்புகளும் ஆன்ம தத்துவத்திற்கு 24 உறுப்புகளும் உள்ளன. இதில் மனித உயிர் எங்கே இருக்கிறது என்றால் ஆன்ம தத்துவத்தில் கடைசி நிலையில் இருக்கிறது அது 36 ஆவது படியை தாண்டி அதற்கு மேல் போக வேண்டும் .இதையெல்லாம் பின்னர் விரிவாக பார்ப்போம்
எனவே தத்துவம் என்பது நாம் பார்க்காத விஷயங்களில் இருந்து சில விஷயங்களைப் பார்த்து, விளக்கி அதை கடந்து, அது தெளிவாக்கி பின் மேலே சென்று, மெய்யை அடைவது ஒன்றே அதன் பயன். சைவம் திருமுறை மற்றும் சித்தாதந்தமாக பிரிந்து இரண்டற கலந்து இருக்கிறது. திருமுறை பாடல்களில் அழகியல் கலந்த சிந்தாந்த பாடல்கள் இருக்கின்றன.
மேலும் இன்று தத்துவம் என்றாலே ஏதோ ஒரு வகை கடினம் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் தத்துவம் ஒரு அறிவு நூல் அந்த அறிவை விரித்து விரித்து சென்று கடைசியில் மெய்யான அறிவை பெறுவதற்குக்காக வழியே சைவ சித்தாந்தம்.
Comments
Post a Comment